கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விசாக பொங்கல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல் நிகழ்வு நேற்று (24.05.21) நடைபெற்றது.

அனுமதிக்கப்பட்ட நபர்களுடன் பொலிஸார் மற்றும் படையினரின் கண்காணிப்பிற்கு மத்தியில் வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. கடந்த 17.05.21 ஆம் திகதி கடல் தீர்த்தம் எடுக்கப்பட்டது. அன்று தொடக்கம் முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் கடல்நீரில் எடுக்கப்பட்ட தீர்த்தத்தில் அணையா விளக்கு எரிந்து வந்தது. இந்த தீர்த்தம் நேற்று மடைப்பண்டங்களுடன் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விசாக பொங்கல் நிகழ்வு பூசைகள் நடைபெற்றன.

ஆலயத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்தவோ அல்லது ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளவே பொதுமக்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. ஆலயத்திற்கு செல்லும் இரண்டு பிராதன வீதிகளிலும் படையினர் வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அனுமதிக்கப்பட் 51 பேர் மாத்திரம் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். இதேவேளை ஆலயத்தின் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக பக்தர்கள் புதுக்குடியிருப்பு கேப்பாபிலவு வீதியில் வருகைதந்தபோதும் வீதியில் உள்ள படையினரின் வீதிசோதனை நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்.

ஆலயத்தினை அண்மிய பகுதிகளில் உள்ள மக்கள் சிலர் வளாகத்திற்கு செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் அவர்கள் ஆலயத்திற்கு செல்லும் வீதியின் சந்திகளில் தோங்காய் உடைத்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றார்கள்.

(புதுக்குடியிருப்பு விசேட நிருபர்)

Related posts