தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக சந்திப்பு ?

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்திந்து தமிழ் அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதன்போது, அரசியல் கைதிகள் பற்றிய விபரங்களை தமிழ் தரப்பினர் அமைச்சரிடம் ஒப்படைத்தனர்.

அதன்படி, விசாரணை முடியாத கைதிகள், தண்டனை வழங்கப்பட்ட கைதிகள் என அரசியல் கைதிகள் குறித்த முழுமையான விபரத்தை கையளித்ததுடன், அவர்களை விடுவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், இது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி முடிவை அறிவிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், கோவிந்தம் கருணாகரம், வினோ நோகராதலிங்கம், சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், இரா. சாணக்கியன், த.கலையரசன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அதேநேரம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் மனோ கணேசன், வே.இராதகிருஷ்ணன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அதேபோல அரசாங்கத் தரப்பில் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தமிழ் அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அண்மையில் அனுப்பிய கடிதத்தை தொடர்ந்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

—–

எந்தவொரு காரணமும் இன்றி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தன்னை கைது செய்து தடுத்து வைத்துள்ளமை சட்டவிரோதமானது என தீர்ப்பளித்து தன்னை விடுதலை செய்யுமாறு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.பீ ஜயசேகர, அதன் பணிப்பாளர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர், பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன.

Related posts