25 தமிழ்த் தொகுதிகளை உருவாக்குமாறு செந்தில் தொண்டமான் வலியுறுத்தல்

குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட தனித் தமிழ் மக்கள் மாத்திரம் உள்ளடங்கும் வகையில், 25தமிழ்த் தொகுதிகளை உருவாக்குமாறும் அதற்குத் தாங்கள் ஆதரவளிப்பதாகவும் இ.தொ.காவின் உப தலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார்.

நீங்கள் தற்போது 70,000 – 80,000பேருக்கான தொகுதிகளை உருவாக்குகிறீர்கள். உதாரணமாக, சுமார் 14இலட்சம் சனத்தொகையைக் கொண்டுள்ள கம்பஹா மாவட்டத்தையும் சுமார் 6இலட்சம் சனத்தொகையைக் கொண்ட மொனராகலை மாவட்டத்தையும் எவ்வாறு தனி மாவட்டங்களாகப் பிரித்திருக்கிறீர்களோ அவ்வாறே தமிழ்ப் பிரதேசங்களுக்கும் தனித் தொகுதிகளை உருவாக்குமாறும் வலியுறுத்தினார்.

அத்துடன், அவ்வாறு வழங்கப்படும் பட்சத்தில், அது எந்தக் கட்சியாயினும், மலையக மக்களின் பிரதிநிதிகள் வரும் வகையில் வழிமுறைகளை வகுத்து அறிவிக்கிறோம் என்றும், செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார்.

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம், அலரி மாளிகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்நேற்று இடம்பெற்றது.

இதில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இ.தொ.காவின் உப தலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, மாகாணசபைத் தேர்தல்களை புதிய முறைமையின் இரு வழிமுறைகள் தொடர்பில் தீர்க்கமாக ஆராயப்பட்டது.

இவ்விரண்டு முறைமைகளில் எதையேனும் மற்றைய கட்சிகள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற சூழ்நிலையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இரண்டு வழிமுறைகளுக்கும் நேரடியாக எதிர்ப்பைத் தெரிவித்தது.

இதன்போது, இதற்கான மாற்று வழிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த செந்தில் தொண்டமான்,

மலைநாட்டில் 10இலட்சம் மலையக மக்கள் செறிந்து வாழ்கின்ற சூழ்நிலையில், புதிய தேர்தல் முறைமையின் படி, மாகாண சபைகள் மூலம் அந்தப் 10இலட்சம் மக்களுக்கும் ஐந்து உறுப்பினர்கள் மாத்திரமே தேர்ந்தெடுக்கப்படுவர். தற்போதைய நிலைமையின் படி, மலையகமெங்கும் தமிழ் மாகாணசபை 25உறுப்பினர்கள் காணப்படுகின்றனர்.

ஆனால், புதிய முறைமையின்படி ‌ஐவர் மாத்திரமே கிடைக்கப்பெறுவர். அதனால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

இதன்போது, இந்த முறைமையைத் தாங்கள் தயாரிக்கவில்லை என்றும் கடந்த அரசாங்கமே இந்த முறைமையைத் தயாரித்துள்ளதென்றும், அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்போது கருத்துரைத்த செந்தில் தொண்டமான்,

அதனால் தான், கடந்த அரசாங்கத்தின் போது, இந்த முறைமைக்குத் தாங்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.

இந்த 25பேர் கிடைக்கப்பெறக்கூடிய வழிமுறைகள் பற்றியும் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், இரட்டைத் தொகுதி தொடர்பிலும் இதன்போது அரசாங்கத்தால் யோசனை முன்வைக்கப்பட்டது.

மீண்டும் பதிலளித்த செந்தில் தொண்டமான்,

இரட்டைத் தொகுதி எனும் பட்சத்தில், சிறுபான்மைக் கட்சிகள் கட்டாயமாகப் பெரும்பான்மைளோடு போகக்கூடிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அதனால், சுயமாகத் தனித்துப் போட்டியிடும் வாய்ப்பற்றுப் போகிறது.

அதனால், அம்முறைமையையும் ஏற்றுக்கொள்ள முடியாதென்று எதிர்ப்புத் தெரிவித்தார்.அந்த வகையில், அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட வழிமுறைகள் சாத்தியப்படாது எனும் பட்சத்தில், தங்களின் ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் முன்வைக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

இதன்போதே செந்தில் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts