இந்தியாவில் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா 1,341 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில வாரங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது.
கொரோனாவின் தீவிர தாக்குதலுக்கு ஆளாகி உள்ள முதல் 5 மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம், கேரளா, கர்நாடகம், தமிழகம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,45,26,609 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,341 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,75,649 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,23,354 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,26,71,220 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 16,79,740 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 11,99,37,641 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வருகிற சூழலில் பரிசோதனைகளும் அதிகளவில் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் இதுவரை 26 கோடியே 49 லட்சத்து 72 ஆயிரத்து 022 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 14,95,397 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.
தடுப்பூசி திருவிழாவால் மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனாலும் முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், கைச்சுத்தம் பராமரித்தல் ஆகிய 3 செயல்களும் கவசமாக கொரோனாவிடம் இருந்து நம்மை பாதுகாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts