ஆளுமை மிக்க அனுபவக் கலைஞன் பாடகர் வதிரி வி.எஸ். மோகன்

யாழ்ப்பாணம் வடமராச்சி மண்ணின் கலைப் பாரம்பரியம் மிக்க வதிரிக் கிராமத்தைச் சேர்ந்தவர் பாடகர் வி.எஸ். மோகன். இருபத்தைந்து ஆண்டுகளாக இசைத் துறையோடு தன்னை இணைத்துக் கொண்டு பயணிக்கும் பாடகர் வி.எஸ் மோகனது குடும்பப் பின்னணி இசைத்துறையோடு பின்னிப் பிணைந்ததாகும்.

இவரது தாயார் நன்றாகப் பாடக்கூடிய ஒருவராகவும், தந்தையார் மிருதங்கத்தை இசைக்கக் கூடியவராகவும் இருந்திருக்கின்றனர். இவர்கள் இருவரினதும் உந்துதல் காரணமாக வி.எஸ். மோகனின் பயணம் தாயாருக்காக குரலிசையோடும், தந்தையாருக்காக தாள வாத்தியக் கலையோடும் பயணமுறத் தொடங்கியது.

பாடகராக பலபேர் அறிந்திருக்கின்ற மோகன் மிகச் சிறந்ததொரு தாள வாத்தியக் கலைஞர் என்பதை பலர் அறிந்ததில்லை. மிருதங்க வாத்தியத்தை தனது குருவான பிரபல மிருதங்க அசிரியர் த.பார்தீபனிடம் கற்றுக் கொண்ட மோகன் மிருதங்கம், தபேலா, டொல்கி போன்ற பல வாத்தியங்களையும் இசைக்கும் வல்லமை உடையவர்.

மோகன் உருவாக்கிய காரணிகளில் அவருடைய பிறந்த கிராமத்திற்குப் பெரும் பங்குண்டு. இவருடைய கிராம நிறுவனங்களான வதிரி பூவற்கரைப் பிள்ளையார் ஆலயமும், வதிரி தமிழ் மன்றமும் இரட்டைக் கண்களாய் இவரது வளர்ச்சியில் பெரும் பங்காற்றியிருக்கின்றது என்பதை பல தடவைகள் அவர் பெருமையாக சொல்லிக் கொள்பவர்.

பதின்னான்கு வயதில் இருந்து கர்நாடக சங்கீதத்தை முறைப்படிக் கற்றுக் கொண்ட இவர் சமகாலத்திலேயே இசை ஆற்றுகையில் பங்கெடுக்கத் தொடங்கினார். இன்று பல இசைக் குழுக்களிலும் மிகப் பிரபல்யம் வாய்ந்த ஒருவராகவும் வலம் வருகிறார்.

தனது ஆரம்பம் குறித்து சுவாரஷ்யமான பல விடயங்களையும் பகிர்ந்து கொண்டார். தான் சார்ந்த கிராமங்களில் வசித்த அன்றைய கலைஞர்களோடு தனது மேடை ஆற்றுகைகளை தொடங்கியதாகவும், 1993இல் கிராமக் கலைஞர்களுடன் இணைந்து ‘யூனிட் இசைக்குழு’ என்ற இசைக் குழுவினூடாக தனது இசை ஆற்றுகையை ஆரம்பித்ததாகக் கூறியிருந்தார்.

அத்தோடு,டோலக் வாத்தியத்தையும், பாடல்களையும் பாடியதுடன் தனது ஆரம்ப நிகழ்ச்சி குறித்தும் பகிர்ந்து கொண்டார். இசைக்கிளி கீபோர்ட் வாத்தியத்தையும், உதயசீலன் ட்ரம்ஸ் வாத்தியத்தையும் இசைத்ததுடன் இவ் நிகழ்ச்சிக்கான அறிவிப்பை தேவானந்த் நிகழ்த்தியதாக தனது ஆரம்ப அனுபவங்களை நெகிழ்ச்சியோடு மீள நினைவுபடுத்திக் கொண்டார்.

இந்த ஆரம்பங்களினூடாக தன்னை நன்கு வளப்படுத்திக் கொண்ட வி.எஸ். தாயகத்தின் மூத்த இசைக்குழுவான அருணா இசைக் குழுவோடு 1999ம் ஆண்டளவில் தன்னை இணைத்துக் கொண்டதன் வாயிலாக அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்ததாகக் கூறினார். கலைஞன் என்பவன் கலைத் துறை வெளியில் தன்னை தொடர்ச்சியாக ஓரிடத்தில் வைத்துக் கொள்வதில் இருக்கின்ற நடைமுறைச் சிக்கல்கள், சூழல்கள் எனப் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருப்பது வழமையான ஒன்று.

ஆனால், தனது அமைதியான சுபாவம் மற்றும் அனைவருடனும் பழகக் கூடிய கலைஞனாய் தன்னை வரித்துக் கொண்டதன் விளைவாக கடந்த இருபத்தியிரண்டு ஆண்டுகளாக இன்று வரை அருணா இசைக் குழுவின் பாடகராக வலம் வருவது மட்டுமன்று அருணா இசைக் குழுமத்தில் ஒருவராகவும் வலம் வருகிறார்.

கே.ஜே.ஜேசுதாஸினுடைய தீவிர ரசிகனான இவர் ஜேசுதாஸ் அவர்களுடைய இடைக்கால முத்தான பாடல்களையும் அதே பாணியில்பாடக் கூடிய ஒருவராகவும் திகழ்கிறார். இசைக் குழுக்களின் பயணத்தில் அருணா இசைக்குழுவை பிரதான இசைக்குழுவாகக் கொண்டு அதில் அங்கம் வகித்தாலும், இலங்கைத் தீவின் அநேக இசைக் குழுக்களிலும், அநேக தொலைக்காட்சி, வானொலி, ஊடகங்களிலும் கலந்துகொண்டு இன்று வரை பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கின்றார்.

தென்றல் வந்து என்னைத் தொடும், மாசி மாசம் ஆளான பொண்ணு, சந்தனமும் செவ்வாதும், தும்பிக்கையில் மோதகமேந்தும் போன்ற பல பாடல்களை இவரது குரலில் கேட்கின்ற போது இனிமையாக இருக்கும். அருணா இசைக்குழுவோடும்,இதர இசைக் குழுவோடும் இணைந்து பயணித்துக் கொண்டிருந்த காலத்தில் 2007ம் ஆண்டில் இவரது கிராமமான வதிரிக் கிராமத்தில் பல பாடகர்கள், பாடகிகள் ஒவ்வொரு வாத்தியங்களையும் வாசிக்கக் கூடிய திறன் படைத்தவர்கள் என அனைவரும் சேர்ந்து வதிரி சப்தம்ஸ், என்னும் மிகத் தரமான ஒரு இசைக் குழுவை ஆரம்பித்தனர்.

இந்த இசைக் குழுவிலும் தனது வகிபாகத்தை செலுத்திய இவர் ஆலோசகராகவும்,சக கலைஞராகவும் தன்னையும் அதில் இனைத்துக் கொண்டார். உண்மையில் இங்கு ஒரு விடயத்திப் பதிவு செய்ய வேண்டிய தேவையொன்றும் இருக்கின்றது. சப்தம்ஸ் இசைக்குழு 2001- 2008களில் மிகச் சிறப்பான கூட்டிணைவோடும், தரமான கலைஞர்களின் கூட்டோடும் மிகக் கலாபூர்வமாக மக்கள் இரசிக்கத்தக்க வண்ணம் இயங்கிய காலகட்டம் அதுவாகும்.

உண்மையில் இடைக்கால பாடல்களிலும் பல கடினமான பாடல்களையும் இசைக்குழுக்களை இசைக்கலாம் என்பதைத் திறம்பட செய்துகாட்டி ஒரு விழிப்பை ஏற்படுத்திய இசைக்குழுவாய் அந்நாளில் அது அமைந்தது என்பது எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்த ஒன்று. அந்தக் கூட்டுருவாக்கத்திலும் இவருக்கென்று ஒரு பங்குண்டு.

இசைக்குழு பாடகர் என்ற தளத்திற்கு அப்பால் வி.எஸ்ற்கு இன்னுமொரு சுதந்திரமான தளம் உண்டு. மிகச் சிறந்ததொரு ஒலிப்பதிவுப் பாடகர் இவர் என்பது அநேகரும் அறிந்த ஒன்று. 1994ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அரங்கேற்றம் என்ற நிகழ்ச்சியினூடாக மூன்று நம் நாட்டுப் பாடல்களை பாடிய இவரது இந்த ஆற்றுகையே இவரது முதல் ஒலிப்பதிவு அனுபவமக அமைந்தது.

அதன் பின்னர் பக்திப்பாடல்கள் என்ற தளத்தில் இவருடைய பூவற்கரைப் பிள்ளையார் ஆலயத்தைப் போற்றிப் பாடுகின்ற பாடல்களைப் பாடத் தொடங்கினார். அந்த அனுபவங்கள் கைதர அதன் பின்னர் 2003ஆம் ஆண்டளவில் இசைக்கோகுலம் அருனாவின் இசையில் ஒரு பாடலையும் பாடியிருந்த இவர் 2004களில் தாயகத்தின் பிரபல இசையமைப்பாளர் கோ.சத்தியனின் இசையில் பாடத் தொடங்கினார்.

அன்று தொடங்கிய இந்த ஒலிப்பதிவுப் பயணம் இன்று பக்திப் பாடல் தளத்தில் தாயகத்தின் அநேக ஆலயங்களிற்கும் இற்றை வரை 250வரையிலான பாடல்களை பாடியிருக்கிறார். இவை தவிர தாயகத்தின் பிரபல மூத்த இசையமைப்பாளர்கள் தொடங்கி இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் வரை பாடியிருக்கிறார்.

உண்மையில் ஒரு கலைஞனின் சுபாவம் ஒருவனை உயர்த்தவும் முடியும்ரூபவ் வீழ்த்தவும் முடியும் என்பதற்கேற்ப யாருடனும் பகைமை பாராமல் அனைவருடனும் சகஜமாகப் பழகி அனைவரின் வளர்ச்சியையும் ஆதரிக்கின்ற ஒருவராக அவலம் வரும் இவரது சுபாவமே இவரது வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றுகிறது என்றால் மிகையல்ல. தாயக எல்லைகள் கடந்தும் புலம்பெயர் தேசங்களில் வசிப்பவர்களாலும் விரும்பப்படுகின்ற ஒரு கலைஞராக கடந்த ஆண்டு புலம்பெயர் நாட்டுப் பயணம் ஒன்று ஏற்பாடாகி இருந்த நிலையில் தான் உலக ஒழுங்கின் மாற்றம் காரணமாக பயணம் தடைப்பட்டுப்போனது.

ஆனால் இனிவரும் காலங்களில் அந்தப் பயணவெளிகள் அகலப்படுத்தப்படும் என்பது நிதர்சனமாகத் தெரிகிறது. நல்லதொரு இசைப் பாரம்பரியம் மிக்க குடும்பத்தின் வாரிசாக இசைத்துறையில் பயணிக்கும் இவரது சகோதரர்களும் இசைதுறையோடு நன்கு வாலாயமானவர்கள்.

Related posts