தமிழினத்திற்கு துரோகமிழைப்போரை பாதுகாக்கின்ற செயற்பாட்டில் கூட்டமைப்பு

தமிழினத்திற்கு துரோகமிழைக்கும் ஆட்சியாளர்களை பாதுகாக்கின்ற செயற்பாடுகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவிலிலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்றுக் காலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்படி குற்றச்சாட்டை கஜேந்திரகுமார் முன்வைத்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஜெனீவா விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தை பாதுகாத்து அரசின் ஊதுகுழலாக எமது கட்சி செயல்படுவதாக சுமந்திரன் முன்வைத்த குற்றச்சாட்டை அடியோடு நிராகரிக்கின்றோம்.

இத்தகைய பொய்யான குற்றச்சாட்டுகளை அவர் வேண்டுமென்றே முன்வைக்கின்றார். ஏனெனில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக ஜெனீவா விடயத்தில் நாம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமென தெரிவித்து வருகிறோம். ஆனால் அவ்வாறு செய்வது சாத்தியமில்லை என்றும் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கி இலங்கை அரசாங்கத்தை பாதுகாக்கின்ற வேலைகளை சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பினர் தொடர்ச்சியாக செய்து வந்தனர்.

அதேபோன்று தற்போது ஜெனீவாவில் கொண்டுவரப்படவுள்ள 46.1 என்ற உத்தேச வரைவுத் தீர்மானம் தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கும் நிலையில் அதனை கண்ணை மூடிக்கொண்டு அவசர அவசரமாக கூட்டமைப்பு ஆதரிக்கின்றது.

கூட்டமைப்பினரின் இத்தகைய செயற்பாடுகள் இந்த அரசாங்கத்தை பாதுகாப்பதுடன் ஒரு சிலரின் நலன்களையும் நிறைவேற்றிக் கொள்ளும் வகையிலேயே அமைகின்றது. இதனை எமது மக்கள் தெளிவாக விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டும் என்றார்.

Related posts