தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வு இருக்க வேண்டும்

புதிய அரசியலமைப்பில் தமிழ் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அதனால் எந்தவிதப் பிரயோசனமும் இருக்காது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னரான ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

கூட்டத்தில் விசேடமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமது மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற அழுத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். அவற்றுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பேசியிருக்கின்றோம். குறிப்பாக நில அபகரிப்பு வேறு வேறு போர்வைகளின் கீழ் நடைபெறுகிறன.

தொல்லியல் திணைக்களம் மிக மோசமாக கிழக்கு மாகாணம், வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளிலும் செயற்படுகின்றது. மகாவலி சட்டம், வனஇலாகா என பல்வேறு சட்டங்களை பயன்படுத்தி எமது மக்களின் நிலங்களை அபகரிக்கின்றது. தொல்லியல் திணைக்களம் மக்களின் வழிபாட்டு தலங்களை மாற்றி அமைக்கும் மோசமான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது.

வவுனியா வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை போன்றவற்றில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு எதிராக வழக்கு பதிவு செய்ய தயாராகி வருகின்றோம். மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் இரு பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயரில் எழுத்தணை மனு தாக்கல் செய்துள்ளோம்.

யாழ்ப்பாணத்திலும் மோசகமான நில அபகரிப்பு இடம்பெறுகிறது. தொல்லியல் திணைக்களம் சில இடங்களை அடையாளப்படுத்தி ஏற்கனவே ஆராச்சி என வேலைகளை தொடங்கியுள்ளது.

இதை தடுப்பதற்காக தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் தமிழ் தேசியக் கட்சிகள் கூடி ஆராய்ந்துள்ளனர்.

வட- கிழக்கு சிவில் அமைப்புக்கள் இந்த விடயங்களையும், அரசியல் கைதிகளின் விடயம், காணாமல் ஆக்கப்பட்டோருடைய விடயம், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் ஜனசா எரிப்பு விவகாரம், மலையக தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் பிரச்சினை என பல்வேறு விடயங்களை உள்ளடக்கி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்று 3 ஆம் திகதியில் இருந்து போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார்கள். இதற்கு எங்களது கட்சியும் ஆதரவு வழங்கியுள்ளது.

பல்வேறு சிவில் அமைப்புக்களும், சமய அமைப்புக்களும் ஆதரவு வழங்கியுள்ளன. அரசியல் தலைமைத்துவம் கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கிறது.

இப்படியான சம்பவங்கள் நடைபெறுகின்ற போது மக்களுக்கு தலைமைத்துவம் கொடுக்க வேண்டும். எனவே அனைவரும் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக கேட்டு நிற்கின்றோம்.

——

பலாங்கொடை பிரதேச பாடசாலை மாணவி ஒருவர் மூழ்கி மரணமான சம்பவத்தின் அடிப்படையில், ஆசிரியை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பலாங்கொடை, கல்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இரத்தினபுரி தென்ன வித்தியாலய ஆசிரியை மற்றும் 14 சக மாணவர்கள், வளவை ஆற்றில் நீராடச் சென்ற போது, 16 வயதான மாணவியே இவ்வாறு பரிதாப மரணத்தை தழுவியுள்ளார்.

வெளிக்கள விடயத்திற்கு பொறுப்பான ஆசிரியை ஒருவரும் 7 சக மாணவிகள் உள்ளிட்ட 15 மாணவ, மாணவியர்களும் இவ்வாறு நீராடச் சென்றுள்ள வேளையில் இம்மரணம் சம்பவித்துள்ளது.

உரிய பாடசாலை அதிபரிடமோ, வலய கல்விப் பணிப்பாளரிடமோ உரிய அனுமதி பெறாமல் குறித்த வெளிக்கள விஜயத்தை மேற்கொண்டுள்ளதன் மூலம் அலட்சியமாக நடந்து கொண்டுள்ளமை தொடர்பில் குறித்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்டுள்ள சிறுமியின் சடலத்தின் பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவு ம் விசாரணை களை நடத்திவரும் கல்தோட்டைப் பொலிசார் நேற்று தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியை இன்றையதினம் (01) பலாங்கொடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts