தமிழ் மக்களின் பிரச்சினையை வைத்து வங்குரோத்து அரசியல் ?

போராட்ட அரசியலால் பெற்றுக்கொடுக்க முடியாத, தமிழர்களுக்கான தீர்வை எவராலும் பெற்றுக்கொடுக்க முடியாது என, பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு வர்த்தக பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 4ஆவது ஆண்டு நிறைவையொட்டி மட்டு.மாவட்ட பட்டிருப்புத் தொகுதிக்கான தேசிய மாநாடு பெரமுனவின் மட்டு. மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தலைமையில் பெரியபோரதீவில் நேற்றுமுன்தினம் (23) இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈழப்போராட்டம் 2009, ஆம் ஆண்டிலேயே மெளனிக்கப்பட்டு விட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரால் பெற்றுக்கொடுக்க முடியாத தமிழீழத்தை என்னுடைய தாத்தாவாலோ உங்களுடைய தாத்தாவாலோ சம்பந்தனது தாத்தாவாலோ பெற்றுக்கொடுக்க முடியாது.

நடப்பதை, சாத்தியமானதை பேசுவோம். நான் தமிழ் ஆண் மகன் என்று சொல்வதை வெட்கப்படுகிறேன். நான் மட்டுமல்ல நீங்களும் வெட்கப்படுகிறீர்கள். கையெடுத்து வணங்கக்கூடிய பெண் சமூகம் மாற்று சமூக வர்த்தக நிலையங்களில் கூலி வேலை செய்கிறது. தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வக்கில்லாதவர்கள் தேவையற்ற கதைகளை கதைத்துக்கொண்டு காலம் கடத்துகிறார்கள்.

அரசாங்கத்துக்கு கடைசி எச்சரிக்கை, நடப்பதே வேறு என வாய் கிழிய கத்தினாலும் என்ன நடக்கப்போகின்றது. அந்தப் பெரிய வலுவான போராட்டத்தால் ஜெயிக்க முடியாத தீர்வை தமிழ்த் தேசியக் கட்சிகளால் பெற்றுக்கொடுப்பதென்பது நகைப்புக்குரியதே.

தமிழர்களுக்கு உரிமைத் தீர்வைப் பெற்றுத்தருவோம், வடகிழக்கை இணைத்துத் தருவோம், தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் நாங்கள்தான், ஆளப் பிறந்த இனம் அடங்கிப் போகக் கூடாது என கடந்த பாராளுமன்ற தேர்தல் காலங்களில் கூறி உங்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் வந்தவர்கள், வியாழேந்திரன் கறுப்புச் சட்டை போடுகிறார் என்று சாடுகிறார்களே தவிர வேறு எதையும் கதைப்பதாக தெரியவில்லை.

கல்வியால் வளர்ந்து கல்வியால் அடையாளப்படுத்தப்பட்ட தமிழ்ச் சமூகம் கல்வி, பொருளாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் பாரிய பின்னடைவை சந்தித்திருக்கின்றது.

மீள எங்களது தமிழ்ச் சமூகத்தை ஏனைய சமூகங்களுக்கு இணையாக கொண்டுவருவதற்கு அரசை நாங்கள் கையிலெடுக்க வேண்டும்.

பலம் பொருந்திய அரசாங்கத்துக்கூடாக எங்களுடைய மக்கள் தேவைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதையே சிந்திக்க வேண்டும்.

எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசியல் செய்த அனுபவம் கடந்த காலத்தில் எனக்கு உண்டு. 2015, 16,17, மற்றும் 2018களில் பாரளுமன்றத்தில் நான் உரைக்காத பேச்சுக்களா, மாவட்டத்தில் நாங்கள் பண்ணாத போராட்ட ஆர்ப்பாட்டங்களா, சுழற்சி முறை உண்ணாவிரதம், கண்டனப் போராட்டங்கள் என எல்லாம் செய்தோம், என்ன நடந்தது, எந்த முன்னேற்றமும் இடம்பெறவில்லை.

தமிழ்மக்களின் பிரச்சினைகளையும் கண்ணீரையும், வைத்துக்கொண்டு தமிழ்மக்களின் கல்லறைகளில் ஏறிநின்று பிழைப்புவாத வங்குரோத்து அரசியலை செய்ய முடியாது.

தமிழ் மக்களுக்கு ஏதாவதொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஆளும்கட்சியில் இணைந்து செயற்படுகிறோம். முஸ்லிம் சமூகம் கடந்த காலத்தில் அபிவிருத்திக்குப் போராடி எந்த உரிமையையும் இழக்கவில்லை. ஆனால் தமிழ்மக்கள் உரிமையையும் அபிவிருத்தியையும் இழந்து நிற்கின்றனர்.

எங்களைப் பொறுத்தவரை நாங்கள் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும். தனி ஒருவரால் இவ்வளவு செய்ய முடியுமென்றால் இருவரால் மூவரால் எவ்வளவோ அபிவிருத்திகளை செய்யமுடியும். விமர்சனங்களை விசமத்தனங்களை கடந்து செல்வதுதான் வாழ்க்கை என்றார்.

மண்டூர் குறூப் நிருபர்

Related posts