ஜல்லிக்கட்டு : 12 காளைகளை அடக்கிய கண்ணனுக்கு கார் பரிசு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. 12 காளைகளை அடக்கிய விராட்டிபத்து கண்ணனுக்கு க்விட் கார் பரிசு வழங்கப்பட்டது. காணும் பொங்கல் தினமான இன்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

மதுரை அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில் இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் மதுரை அலங்காநல்லூருக்கு இன்று வருகை தந்தனர். இவர்களுடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர் ராஜன் செல்லப்பா ஆகியோர் வருகை தந்தனர். முதலில் கோவில் காளைகளுக்கு அவர்கள் மரியாதை செய்தனர்.

இதனை தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் அமைச்சர்களுடன் இணைந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதன் பிறகு ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இருவரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

மாடுபிடிவீரர்கள் ஒரு சுற்றுக்கு 75 பேர் வீதம் தனித்தனி குழுவாக களமிறங்கி வௌகின்றனர். அதிக காளைகளை அடக்கும் வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறுவர். அதிக காளைகளை அடக்கும் வீரர்கள், சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு முதல்வர், துணை முதல்வர் இருவரும். தலா ஒரு கார் பரிசாக வழங்குகின்றனர்.

திட்டமிட்டபடி 8 சுற்றுகளும் நடத்த முடியாததால் கூடுதலாக 1 மணி நேரம் போட்டி நீடிக்கப்பட்டது அலங்காநல்லுர் ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது 8 சுற்றுகளும் நிறைவு பெற்று உள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 719 காளைகள் வாடிவாசல் வழியாக சீறிபாய்ந்தன; 700 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்

அலங்காநல்லூரில் 12 காளைகளை அடக்கிய விராட்டிபத்து கண்ணனுக்கு க்விட் கார் பரிசு வழங்கப்பட்டது.

Related posts