இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் – பிரதமர் மோடி

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

எக்காலமும் மாறாத அறத்தை எடுத்துரைக்கும் உலகப் பொதுமறை நூலான திருக்குறளை இவ்வுலகிற்கு வழங்கிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2 ஆம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருவள்ளுவருக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் தினத்திற்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமீப காலமாக பிரதமர் மோடி பல்வேறு இடங்களில் பேசும் போது திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். திருக்குறளின் பெருமைகள் குறித்தும், அதை அனைவரும் படிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில் இன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என தான் வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குவதாகவும், அவரது சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிப்பதாகவும் மோடி கூறியுள்ளார்.

மேலும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் லட்சியங்கள் பல தலைமுறைகளைக் கடந்து இன்று வரை மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related posts