நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் 300 பேர் மீட்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது. இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பதோடு, சிறுவர் சிறுமிகளை கடத்தி சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கட்சினா மாகாணத்தில் அரசு ஆண்கள் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இங்கு 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். கடந்த 11ந்தேதி பள்ளிக்கூடத்தில் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது கையில் துப்பாக்கிகளுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் இந்த பள்ளிக்கூடத்தில் புகுந்து சூறையாடினர்.

இதனால் அதிர்ச்சியில் மாணவர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள பள்ளிக்கூடத்தில் இருந்து தப்பி வெளியே ஓடினர். பின்னர் அவர்கள் பயங்கரவாதிகளிடம் இருந்து தற்காத்து கொள்வதற்காக அருகில் உள்ள புதர்களில் மறைந்து கொண்டனர்.

இரவு முழுவதும் அங்கேயே பதுங்கி இருந்த மாணவர்கள் சூரிய உதயத்துக்கு பின் மறுநாள் காலை வீடுகளுக்கு திரும்பினர். இப்படி 406 மாணவர்கள் வீட்டுக்கு திரும்பி விட்ட நிலையில், ஏறக்குறைய 400 மாணவர்கள் வீடு திரும்பவில்லை.

இதனால், மாயமான அந்த மாணவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றிருக்கலாம் என்று கூறப்பட்டது.

இதற்கிடையில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் இணைந்து பள்ளிக்கூடத்துக்கு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று மாயமான மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும், அதில் பலன் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்திற்கு நைஜீரிய அதிபர் முகமது புகாரி கடும் கண்டனம் தெரிவித்ததுடன், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து விசாரணை மேற்கொள்ளும்படி பாதுகாப்பு வீரர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய் கிழமை ஜிகாதி போராளி அமைப்பு இந்த தாக்குதலுக்கும், மாணவர்கள் கடத்தலுக்கும் பொறுப்பேற்று கொண்டது. இதுபற்றி அந்த அமைப்பின் தலைவர் அபுபக்கர் ஷேகாவ் கூறும்பொழுது, மேற்கத்திய கல்விக்கு எதிராகவும் மற்றும் இஸ்லாம் பெயரிலும் இந்த கடத்தல்கள் நடத்தப்பட்டன என கூறினார்.

இதனை தொடர்ந்து, அந்நாட்டு பாதுகாப்பு படையினர், கடத்தப்பட்ட மாணவர்களை மீட்கும் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மாணவர்கள் மீட்கப்பட்ட தகவலை கத்சினா மாநில கவர்னர் அமினு பெல்லோ மசாரி செய்தியாளர்களிடம் இன்று அறிவித்துள்ளார். அவர் கூறும்பொழுது, கடத்தப்பட்ட மாணவர்கள் 344 பேரும் கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு விட்டனர் என்ற செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அவர்கள் பாதுகாப்பு வீரர்களுடன் உள்ளனர். இன்றிரவு கத்சினாவுக்கு கொண்டு வரப்படுவார்கள். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி மற்றும் பிற நலவசதிகள் முறையாக வழங்கப்படும். இதன்பின்னர் அவர்களது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.

Related posts