சில்க் ஸ்மிதா வாழ்க்கை படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகை மர்மச்சாவு

நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகை, மர்மமான முறையில் கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் பிணமாக கிடந்தார்.

நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை தழுவி பிரபல இயக்குனர் மிலன் லூத்ரியா எடுத்த இந்தி படம் ‘தி டர்ட்டி பிக்சர்’. 2011-ம் ஆண்டு வெளியான இந்த படம் உள்பட பல படங்களில் நடித்து பெயர் பெற்றவர் பிரபல இந்தி நடிகை ஆர்யா பானர்ஜி (வயது 33). இவரது தந்தை மறைந்த சிதார் இசைக்கலைஞர் நிகில் பந்தோபாத்யா ஆவார்.

மும்பையில் மாடலிங் கலைஞராகவும் புகழ் பெற்றவர், ஆர்யா பானர்ஜி.

இவர் கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது தளத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று காலையில் அவரது வீட்டில் வேலை செய்து வந்த வேலைக்கார பெண் வழக்கம்போல வேலைக்கு அங்கு சென்றார். அழைப்பு மணியை அழுத்தினாலும் நீண்ட நேரமாக பதில் இல்லை. செல்போனில் அழைத்தாலும், அந்த அழைப்பு ஏற்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்கத்தினரிடம் தகவல் சொன்னார். அவர்கள் போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.

போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றால், நடிகை ஆர்யா பானர்ஜி தனது படுக்கை அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது அறையில் இருந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.

ஆர்யா பானர்ஜி தனியாக வசித்து வந்ததாகவும், பெரும்பாலும் அவர் மட்டுமே வீட்டில் இருந்து வந்ததாகவும் வேலைக்கார பெண் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். அதன் முடிவில் நடிகை ஆர்யா பானர்ஜி மர்மச்சாவின் பின்னணி தெரிய வரும்.

Related posts