அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்வோம்

நாடு எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களையும் வெற்றிகொள்ள நாட்டு மக்கள் அனைவரினதும் பூரண ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கிணங்க மக்களுக்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஒருபோதும் வெல்ல முடியாது என்ற பயங்கரவாத யுத்தத்தை அனைவரதும் ஒத்துழைப்புடன் வெற்றிகொள்ள முடிந்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி நாடு எதிர்கொள்ள கூடிய அனைத்து சவால்களையும் மக்கள் ஒத்துழைப்புடன் வெற்றிகொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

நாட்டைப் பாதுகாப்பதே மக்களின் பிரதான எதிர்பார்ப்பாக இருந்தது குறுகிய காலப்பகுதியில் அதனை நாம் நிறைவேற்றியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று ஒரு வருட பூர்த்தியையொட்டி நேற்றைய தினம் தொலைக்காட்சி ஊடாக அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். நாட்டின் அரசியலமைப்புக்கு இணங்க நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கும் பௌத்த மதத்தை போஷித்து அதனைப் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதியாக தாம் பதவியேற்ற போது அனுராதபுரம் ருவன்வெலிசெயவில் இருந்து நாட்டுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய தொடர்ந்தும் தாம் செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, நான் ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்னர் இனவாத ரீதியாகவும் அடிப்படைவாத ரீதியாகவும் பல நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்.

பாதாள உலகக் குழு பலமடைந்து அதனூடாக நாடளாவிய ரீதியில் கொலைகள் இடம்பெற்றன. இலங்கையானது சர்வதேச முதலீட்டாளர்களின் அதிருப்தியை பெற்ற நிலையிலேயே காணப்பட்டது.

புலனாய்வுப் பிரிவும் பாதுகாப்பு பிரிவும் பலவீனமடைந்த நிலையில் நாடு பாதுகாப்பற்ற நிலையிலேயே காணப்பட்டது. நாட்டின் பல்வேறு தொல்பொருள் பிரதேசங்கள் கூட அடிப்படைவாதிகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. நான் ஆட்சியை பொறுப்பேற்ற பின் பாதுகாப்பு பிரிவுக்கு பொருத்தமான அதிகாரிகளை நியமித்தேன். அவர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான அதிகாரத்தைப் பெற்றுக் கொடுத்தேன். வீழ்ச்சி யடைந்திருந்த புலனாய்வுப் பிரிவை மீண்டும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தேன். அதற்கிணங்க எந்தவிதத்திலும் நாட்டில் இனவாதம் தலை தூக்குவதற்கான சந்தர்ப்பத்தை நாம் இல்லாதொழித்துள்ளோம். போதைப்பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிக்க முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாதாள உலகக் குழு தலைதூக்குவதற்கு இனி இந்த நாட்டில் இடமில்லை. இனியும் இந்த நாட்டுமக்கள் பாதாள உலகக் குழுக்களுக்கோ கப்பம் பெறுவோருக்கோ பயந்து வாழ வேண்டிய அவசியம் கிடையாது. அதற்கான திட்டத்தை நாம் மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுப்போம். அரச துறையில் ஊழல் வீண் விரயங்களை இல்லாதொழிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். குற்றங்கள் செய்வோருக்கு எதிராக முறையான சட்டம் பிரயோகிக்கப்படும்.

எதிர்காலத்தில் பல்வேறு சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவற்றை நாம் வெற்றிகரமாக மேற்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Related posts