உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20. 46

தேவனும் மனித வாழ்வும்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
கர்த்தாவே யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? உத்தமமாக நடந்து நீதியை நடப்பித்து மனதாரச் சத்தியத்தை பேசுகிறவன்தானே. சங்கீதம் 15:1-2.

இன்றைய நற்சிந்தனையை நன்றாக விளங்கிக் கொள்ள சங்கீதம் 15ஐ வாசிப்போம். அப்போது தேவனுடைய நீதியினால்வரும் மனித வாழ்வின் முழுமையை நம் அன்றாட வாழ்வில் உணரமுடியும்.

கர்த்தாவே யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்? உத்தமனாய் நடந்து நீதியை நடப்பித்து மனதாரச் சத்தியத்தை பேசுகிறவன்தானே. அவன் நாவினால் புறங்கூறாமலும் தன்தோழருக்குத் தீங்கு செய்யாமலும்;, தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.

ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன், கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான். ஆணையிட்டதில் தனக்கு நஸ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான். தன் பணத்தை வட்டிக்கு கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாக பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப் படுவதில்லை.

நம்மைச்சுற்றிலும் அநீதி நிறைந்திருக்கும் இந்த நாட்களில் நீதியை நடப்பித்து என்னவாகப் போகிறது? நீதி செய்தால் அல்லது நீதியாக நடந்தால் இவ்வுலகில் வாழத்தான் முடியுமா என்ற ஓர் கேள்வி நம் எல்லோரிடத்திலும் உள்ளது? ஒருசிலவேளை நம்மில் பலரின் உள்ளத்தில் எழும்பும் ஓர் பெருமூச்சாக இவை இருக்கலாம். உண்மைதான். அநீதி நிறைந்த உலகில் நீதியின் பாதையில் நடப்பது மிகக்கடினம். தேவனையண்டி வாழும்போது நாம் இவ்வுலகத்தில் வாழந்தாலும், இருந்தாலும் நாம் உலகத்தார் அல்ல என்பதை நம் தேவன் சொல்லியுள்ளார்.

நாம் தேவனுடைய பிள்ளைகள். அப்படியாயின் தேவனுடைய நீதி நம் வாழ்வில் வெளிப்படுத்தப்பட வேண்டும். தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் நீதி உலகம் எதிர்பார்க்கும் நீதியிலும் வேறுபட்டது. அப்படியாயின் அதன்படி வாழ்வதும், நடப்பதும் சாத்திய மாகுமா? ஏன்ற கேள்வி எழும்பக்கூடும்.

இந்த கேள்விக்கு விடைகாண்பதற்கு முன்னர் தேவநீதி என்றால் என்பதற்கு விடைகாண வேண்டும். வேதத்தில் சொல்லப்படும் பழைய ஏற்பாட்டுக்காலத்தில் தேவனின் கட்டளைகளுக்கு, நியாயப்பிரமாணங்களுக்கு கீழ்ப்படிவதே தேவநீதியாகும். ஆனால் புதியஏற்பாட்டுக் காலத்தில் அதாவது இயேசுவின் பிறப்பு, மரணம், உயிர்ப்பிற்குப் பிற்பாடு தேவனால் உண்டாயிருக்கும் இயேசு கிறிஸ்துவை விசுவசிப்பதன் மூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவர் களாக இருக்க வேண்டும் என்று வேதம் எமக்கு தெரியப்படுத்துகிறது (பிலி.3:9).

அதாவது, தேவநீதி என்பது கிரியைகளில் (மனித செயல்களில்) மாத்திரம் காணப்படாமல் நமக்குள் மறைந்திருக்கும் மனநோக்கில் இருந்து வெளிப்படுகிறது. நன்மைகளின் நிறைவினால் நிறைந்திருப்பதே தேவநீதி ஆகும். நன்மை நமது உள்ளத்தை நிறைத்திருந்தால் நமது வெளிவாழ்வு தேவநீதியை பிரதிபலிப் பதாகவே இருக்கும். நம் தேவன் முன்மாதியாக செய்துகாட்டிய அவரின் நீதியை ஒருகணம் சிந்தித்துப் பார்ப்போமா.

ஒரு பாவமுமறியாத இயேசு கிறிஸ்துவை பாவிகளாகிய நமக்காக பாவ நிவாரண பலியாக ஒப்புக்கொடுத்தாரே நம்தேவன். இதனை நீங்களும் நானும் வாழும் உலகம் ஏற்குமா? ஏற்காது. காரணம் குற்றம் செய்தவன்தான் தண்டனை பெறவேண்டியது. உலகநியதி. ஆனால் நம்தேவன் நாம் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ளும் படியாக தமது குமாரனை தண்டனைக்கு உட்படுத்தி எம்மை விடுதலைப்படுத்தினார்.

இந்த சங்கீதத்தை எழுதிய தாவீது ராஜாவின் உள்ளத்தில் ஒரு வாஞ்சை ஓடிக் கொண்டேயிருந்தது. தேவனுடைய பிரசன்னத்தில் எப்போதும் இருக்கவேண்டும் என்பதாகும். அவரின் வாஞ்சையை சங்கீதப் புத்தகத்தில் நாம் காணலாம்.

கர்த்தருடைய கூடாரத்தில் தங்கியிருக்கக்கூடியவன் யார்? கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணக் கூடியவன் யார்? இன்றைய காலகட்டத்தில் இந்த வாஞ்சையை மனிதகுலத்தில் கண்டு கொள்வது மிகவும் கடினம். காரணம் நித்தமும் பாவஞ்செய்து பாவத்தில் உழலுகிற நாம், கர்த்தருடையபிரசன்னத்தில் தங்கியிருப்பது எப்படி? அது முடியும். அது முடியவேண்டும். இல்லாவிட்டால் நாம் வாழ்ந்து என்ன பயன். நம் உள்ளத்தில் அந்த வாஞ்சை இருந்தாலே போதும். கர்த்தர் அதை நிறைவேற்றுவார்.

தாவீதிற்கு அன்று இயேசுவின் இரத்தத்தைக் குறித்து ஒன்றும் தெரியாது. நாமோ இன்று அந்த இரத்தத்தினால மீட்பை பெற்றிருக் கிறோம். அந்தவாஞ்சை இரட்டிப்பாக நமக்குள் எழும்ப வேண்டும். எமது உள்ளம் தேவனுடைய கூடாரத்தில் வாழ வேண்டும் என்ற வாஞ்சையால் நிரம்பி வழிய வேண்டும். அப்பொழுது அவர் நமது விருப்பத்தை அறிந்து நமது வாஞ்சையை நிறைவேற்றுவார். காலையும் மாலையும் அவர் பிரசன்னத்தில் நிலைத்திருக்கின்ற வாழ்வை வாஞ்சிப்போம். அப்பொழுது எமது உள்ளம் நன்மையினால் நிறைந்து கொள்ளும். வாழ்க்கை வித்தியாசமாகவும் சந்தோசமாகவும் மாறும்.

அன்பும் இரக்கமும் நிறைந்த நல்லபிதாவே, இன்று உம்முடைய கூடாரத்தில் வாழவாஞ்சிப்பதனால் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தையும் அதனால் மனித குலத்திற்கு கிடைக்கும் மகிழ்ச்சி சந்தோசம் என்பது பற்றி அறிய உதவியதற்காக உமக்கு நன்றி. உமது கூடாரத்தில் வாழ்வதை வாஞ்சித்து உமக்குள் மகிழ்ச்சியாயும் சந்தோசமாயும் இருக்கும் கிருபை வரத்தை எனக்குத்தந்து, எந்த நிலையிலும் உம்மை விட்டு விலகாமல் வாழும் வாழ்க்கையை வாழ உதவி செய்து என்னைக்காத்து வழிநடத்தும்படியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – praying for Denmark.

Related posts