கொரோனா தடுப்பூசி 90% திறன் படைத்தவை

அமெரிக்க நிறுவனம் கொரோனாவை தடுப்பதில் கண்டுபிடித்த தடுப்பூசி 90 சதவிகிதம் திறன் படைத்தவை என நிரூபிக்கப்பட்டுள்ளது ஆனால் ஒரு சிக்கல் உள்ளது.

அமெரிக்க மருந்து நிறுவனமான பைசர் (Pfizer) தங்களின் கொரோனா தடுப்பூசி குறித்து உறுதியான தகவலை வெளியிட்டுள்ள நிலையில், இங்கிலாந்து அரசு முதற்கட்டமாக 1 கோடி டோஸ்களை வரவழைக்கும் என உறுதி செய்துள்ளது.

ஜெர்மன் மருந்து நிறுவனம் ஒன்றுடன் இணைந்து அமெரிக்காவின் நிறுவனம் பக்கவிளைவுகளற்ற கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.இத்தகவல் உலக நாடுகள் அனைத்தையும் திரும்பிப்பார்க்க வைத்த நிலையில், அமெரிக்க அதிபராக தேர்வான ஜோ பைடன், நேற்றைய தினம் தனது முதல் அறிவிப்பாக, அமெரிக்க மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்தார்.

அதேவேளை, இங்கிலாந்து அரசும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் 50 லட்சம் இங்கிலாந்துகாரர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளதுடன், 1 கோடி டோஸ்கள் வரவழைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக முதியோர் இல்லங்களில் பணியாற்றும் ஊழியர்கள், முதியோர்கள் ஆகியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும், பொதுமக்களுக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வழங்கப்படும் எனவும் இங்கிலாந்து நிர்வாகம் உறுதி செய்துள்ளது.கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான முடிவில்லாத போராட்டம், பல மாத கால துயரங்களுக்குப் பிறகு, இதுவரை 61,498 பேர் சிகிச்சை பலனின்றி இங்கிலாந்தில் மரணமடைந்துள்ளனர்.

இங்கிலாந்து அரசு பைசர் நிறுவனத்திடம் இருந்து சுமார் 4 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பெற ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதில் முதல்கட்டமாக 1 கோடி டோஸ்களை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் வரவழைக்க திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, கொரோனா தடுப்பூசி குறித்து மகிழ்ச்சிக்குரிய தகவல் வெளியானாலும், மக்கள் தங்கள் பாதுகாப்பு வளையத்தை மீற வேண்டாம் என பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க மருந்து நிறுவனமான பைசரும், பயோஎன்டெக்கும் சேர்ந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி வெற்றிகரமான பலன்களை அளித்தாலும், அதை பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனாவை தடுப்பதில் இந்த தடுப்பூசி 90 சதவிகிதம் திறன் படைத்தவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு கீழே வைத்து தான் பயன்படுத்த முடியும் என அதன் கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வெப்ப நிலையில் மட்டுமே கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறனை இந்த தடுப்பூசி உருவாக்கும்.

மிகவும் நவீனமான அமெரிக்க மருத்துவமனைகளிலேயே இதை பயன்படுத்துவது சவாலான செயல் என்பதால், வளரும் மற்றும் ஏழை நாடுகளில் உள்ள சாதாரண மக்களுக்கு இதனால் பயன் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக மாறி உள்ளது.

Related posts