அனைத்து நாடுகளுடனும் இணைந்து பயணிக்க இலங்கை தயார் நிலையில்

அணி சேரா நாடு என்ற வகையில், அனைத்து நாடுகளுடனும் இணைந்து பயணிக்க இலங்கை தயாராகவே உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அமெரிக்க இராஜாங்க செயலாளரின் வருகையானது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே கருதப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆசியாவிலேயே இலங்கைதான், பழமைவாய்ந்த ஜனநாயக நாடாகும்.

90 வருடங்களாக எமது மக்கள் வாக்குரிமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நாட்டின் ஜனநாயகம் இன்னும் பலமாகவே உள்ளது என்பதை இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் காண்பித்துள்ளன.

இந்த நாட்டின் ஐக்கியம், நல்லிணக்கம், தேசியப் பாதுகாப்பு தொடர்பாக நாம் ஸ்திரமான நிலைப்பாட்டுடன் இருக்கிறோம். எமது நட்பு நாடுகளுடன், இணைந்து பணியாற்றவும் நாம் உறுதியாகவே இருக்கிறோம்.அத்தோடு, பக்கச்சார்பற்ற அணிசேரா நாடாக இலங்கை தொடர்ந்தும் பயணிக்கும் என்பதையும் கூறிக்கொள்கிறோம்.

அந்தவகையில், அமெரிக்காவுடனும் ஏனைய நாடுகளுடனும் இலங்கை உறவுகளை வளர்த்துக்கொள்ளும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts