சமூகத்தின் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு தற்கொலை வைரமுத்து

சமூகத்தின் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு தற்கொலை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதில் தமிழகம் தொடர்ந்து 2 ஆம் இடத்தில் இருந்து வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தரும் தகவலை நேற்று வெளியிட்டது.

அதுமட்டுமில்லாமல் அதிகமாக தற்கொலை செய்து கொள்ளும் நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் இருப்பதாகவும் 2,461 தமிழகத்தில் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தது.

மேலும், காதல் பிரச்னை, குடும்பத் தகராறு உள்ளிட்ட காரணங்களால் தான் அதிகளவு தற்கொலை நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது. தேசிய ஆவண காப்பகம் வெளியிட்ட இந்த தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் தற்கொலையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பது குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-தற்கொலையில் தமிழகம் இரண்டாமிடமாம். மனிதன் மீது இயற்கை காட்டும் எதிர்ப்பு மரணம்; மனிதன் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு கொலை; மனிதன் சமூகத்தின் மீது காட்டும் எதிர்ப்பு தற்கொலை. தற்கொலை தவிர்க்க அதன் காரணங்கள் களையப்பட வேண்டும்; களைவோமா? என பதிவிட்டுள்ளார்.

Related posts