சக வேட்பாளர்கள் எதிர்த்தபோதும் ஸ்ரீதரன் மட்டுமே ஆதரவு தந்தார்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை பதவியை சி.ஸ்ரீதரனுக்கு வழங்கினால் ஆதரிப்பேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அவ் ஊடகத்துக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கட்சிக்கு எதிராக நான் நடந்துகொள்பவனல்ல. எனினும், சக வேட்பாளர்கள் எனக்கு எதிராக பரப்புரை செய்தார்கள். நான் ஒருபோதும் அப்படி செய்யவில்லை. எனக்கு ஆதரவாக ஸ்ரீதரன் மட்டுமே இருந்தார்.

இதனால் இறுதியில் அவருக்கு எதிராகவும் பரப்புரை செய்தார்கள். இறுதியில் நானும், சிறீதரனுமே வெற்றிபெற்றோம். எமக்கு எதிராக சதி செய்தவர்கள் தோல்வியடைந்தார்கள். மக்கள் தீர்ப்பின்படி சிறீதரனும், நானும் வெற்றிபெற்றிருக்காவிட்டால், கட்சி இன்னும் அவமானமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும். ஓர் ஆசனத்தை பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்.இதேவேளை, கட்சி மறுசீரமைக்கப்படும்போது அனைவரும் விரும்பி தலைமை பதவியை வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்வேனென சிறீதரன் கூறியுள்ளார். தனக்கு அந்த பதவியை தருமாறு அவர் கோரவில்லை. அவ்வாறு சிறீதரனுக்கு தலைமை பதவி வழங்கினால் அதற்கு நான் ஆதரவு வழங்குவேன் என்றார்.

—–

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் நியமனம் தொடர்பில் சம்மந்தமில்லாத தரப்பினர் தலையிட்டதும், அது தொடர்பாக அவர்கள் நடந்துகொண்ட விதமுவே அதிருப்தியளிப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். மேலும் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரவிராஜ் சசிகலாவையே பிரேரிக்க இருந்ததாகவும், எனினும் கட்சியினதும் மற்றும் பலரது அறிவுரைகளின்படியே தான் அந்த நியமனத்தை பெற்றுக்கொள்ள சம்மதித்தாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமான தவராசா கலையரசன் நியமிக்கப்பட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அவரது நியமனம் கட்சியினால் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

எனினும் நேற்று முன்தினம் வெளியாகியிருந்த வர்த்தமானியில் கலையரசனது பெயர் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக மாவை சேனாதிராஜாவிடம் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

கலையரசனது நியமனத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அந்த முடிவை யார் எடுத்தார்கள் என்பது தான் எமது கேள்வி. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் இது தொடர்பாக கலந்துரையாடாமல் இந்த முடிவு சம்மந்தமில்லாதவர்களால் எடுக்கப்பட்டுள்ளது.

நான் இத் தேசிய பட்டியல் நியமனத்தை பெற்றுக்கொள்ள நினைத்திருக்கவில்லை. எனினும் தமிழரசு கட்சி மட்டத்திலும் எமது புலம்பெயர் கட்சி உறுப்பினர்கள் மட்டத்திலிருந்தும் என்னை பெற்றுக்கொள்ளுமாறு கூறியதன் பின்னரே நான் சம்மதித்தேன்.

எனினும் நான் சசிகலா ரவிராஜையே தேசியப்பட்டியலுக்காக பிரேகரிக்க இருந்தேன். கலையரசன் நியமிக்கப்பட்டமைக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆயினும் அந்த முடிவை கட்சியுடன் கலந்துரையாடாமல் சம்பந்தமில்லாத தரப்பினர் நடந்துகொண்ட விதமே அதிருப்தியளிக்கிறது.

இதேவேளை தேசியப்பட்டியலில் பெயர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதனை மீளப் பெறுவதா அல்லது அதனையே அமுல்படுத்துவதா என்பது தொடர்பாக நாம் கட்சி மட்டத்தில் கலந்துரையாடியே தீர்மானிக்க முடியும் என்றார்.

Related posts