பிளாஸ்மா தெரபி சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது

பிளாஸ்மா தெரபி சிகிச்சை நல்ல பலன் அளிப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா தெரபி சோதனைகள் நன்றாகப் பலன் கிடைத்துள்ளன என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கெஜ்ரிவால் மேலும் கூறும் போது, “ பிளாஸ்மா தெரபி சிகிச்சையை சோதனை அடிப்படையில் அளிக்க மத்திய அரசு எங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. லோக் நாயக் மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில நோயாளிகளை அங்கு அனுமதித்துக் கண்காணித்து வருகிறோம்.

ஐசியூவில் மிகவும் மோசமான உடல் நிலையுடன் இருந்த ஒரு நோயாளி பிளாஸ்மா தெரபி சிகிச்சை மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். பிளாஸ்மா தெரபியின் ஆரம்பகட்ட பலன்கள் நல்ல நிலையில் உள்ளன. கொரோனாவில் இருந்து குணம் அடைந்த 1,100-க்கும் மேற்பட்ட நபர்களை, பிளாஸ்மா தானம் செய்யுமாறு தொடர்பு கொண்டுள்ளோம். இவர்களில், பெரும்பாலானோர் நோயாளிகளை குணப்படுத்துவதற்காக பிளாஸ்மாவை தானமாக வழங்க முன்வந்துள்ளனர்” என்றார்.

முன்னதாக, கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அல்ல, இதுவெறும் சோதனை அளவில் தான் உள்ளது, இதுதொடர்பாக முடிவுகள் வரும்வரை யாரும் பிளாஸ்மா சிகிச்சை செய்ய வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை கடந்த சில தினங்களுக்கு முன் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

Related posts