கொரோனா : இந்தியா தமிழகத்தின் இன்றைய 23.03.2020 முக்கிய செய்திகள்..!

சட்டப்பேரவையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

* கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதலாக 500 கோடி நிதி ஒதுக்கி செய்யப்படுகிறது.

* கொரோனாவால் 100 ஆண்டுகளில் சந்தித்திராத சவாலை தற்போது சந்திக்கிறோம்.

* கொரேனாவால் ஒரு உயிரை கூட இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை.

* அரசு மருத்துவமனைகளில் 92 ஆயிரத்து 406 படுக்கை வசதிகள் உள்ளது. தேவைக்கு ஏற்ப அது அதிகரிக்கப்படும்.

* 560 வென்டிலேட்டர்கள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

* மேலும், கல்லுாரி விடுதி மாணவர்களுக்கான உணவு மானியம் ஆயிரம் ரூபாயில் இருந்து, ஆயிரத்து 100 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

* வெளிநாடு சென்று வந்தவர்களின் விவரங்கள் மற்றும் அவர்களுடன் இருந்தவர்களை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.

* அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள் தோளாடு தோள் நிற்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

——-

தமிழகத்தில் நேற்று வரை 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினில் இருந்து வந்த நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பாதிப்புக்குள்ளான அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

——

தமிழகத்தில் ”மக்கள் ஊரடங்கு” கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தியாவசிய பணிகள் தொடர எந்த தடையும் இல்லை என்றும் ஊரடங்கிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

—–

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தோற்றுவித்துள்ள, கொரோனா வைரசுக்கான தேசிய சிறப்பு படையானது, மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைடிராக்சிகுளோரோகுயின் என்ற மருந்து பொருளை வைரஸ் பாதிப்பு சிகிச்சைக்கு பரிந்துரை செய்துள்ளது.

எனினும், மருத்துவர் அளிக்கும் பரிந்துரையின் பேரிலேயே சிகிச்சை அளிக்கப்பெற வேண்டும். அமெரிக்க அரசு கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இந்த மருந்து பொருளை முன்பு பரிந்துரை செய்திருந்தது.

—–

புனேவிலிருந்து டெல்லி சென்ற ஏர் ஏசியா விமானத்தில் கொரோனா பாதிப்புடன் வெளிநாட்டு பயணி ஒருவர் பயணம் மேற்கொண்ட தகவல் விமானிக்கு கிடைத்து உள்ளது. தனக்கு முதல் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த குறிப்பிட்ட நபருக்கு கொரோனா தொற்று இருப்பதாக நினைத்து சந்தேகத்தின் பேரில், மற்ற பயணிகள் அனைவரும் விமானத்தின் பின்வாசல்வழியாக கீழே இறக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விமானி முன்வாசல் வழியாக இறங்க வேண்டும் அல்லது அவசரவழியாக இறங்க வேண்டும். எனவே, அவர் விமானி ஓட்டி அறை வழியாக கீழே குதித்துள்ளார். இதை ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.அதன்பின், அந்த குறிப்பிட்ட நபரை மருத்துவ குழுவினர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர் ஆனால் அவருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்று தெரியவந்துள்ளது.

—–

இந்தநிலையில் கரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து வருவதால் உள்நாட்டு விமானப் போக்குவரத்தையும் நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாளை (செவ்வாய் கிழமை) இரவு 11.59 மணிக்குள் அனைத்து விமானங்களும் அதன் இடங்களுக்கு சென்று விட வேண்டும், அதற்கு பிறகு பயணிகள் விமானம் ஏதும் இயக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பன்னாட்டு விமான சேவை ஏற்கெனவே நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகள் இந்தியா வருவதை தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சரக்கு விமானங்கள் மட்டும் இயக்கப்படும்.

—–

Related posts