கொரோனா தாக்குதலுக்கு ஈரான் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பலி

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஈரான் நாட்டின் டெஹ்ரான் தொகுதி பெண் எம்.பி. உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 145 ஆக உயர்ந்தது.

சீனாவில் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் வேகமாக மற்ற மாகாணங்களுக்கும் பரவியது.

இதனால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாததால் தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது.

சீனாவுக்கு வெளியே மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த மூன்று நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

மேற்காசிய நாடான ஈரானில் நேற்று ஒரே நாளில் 17 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகினர்.

மேலும் புதிதாக 1,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 4 ஆயிரத்து 747 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரான் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பாத்தேமேஹ் ரஹ்பர்(55) என்ற பெண்மணி கொரோனா தாக்கத்தால் இன்று உயிரிழந்தார். இவருடன் மேலும் 20 பேர் சிகிச்சை பலனின்றி இன்று அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதைதொடர்ந்து இந்த வைரசின் தாக்குதலுக்கு ஈரானில் பலியானவர்கள் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.

Related posts