மூக்குத்தி அம்மன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

‘எல்.கே.ஜி’ படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி நடித்து, இயக்கியுள்ள படம் ‘மூக்குத்தி அம்மன்’. இந்தப் படத்தை அவருடன் என்.ஜே.சரவணனும் இணைந்து இயக்கியுள்ளார். இதில் நயன்தாரா, மெளலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கன்னியாகுமரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று (பிப்ரவரி 29) மாலை 7 மணியளவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்தது.

அதன்படி, ’மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது வேல்ஸ் நிறுவனம். அம்மன் வேடமிட்டு நயன்தாரா இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படம் மே மாதம் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்தப் படத்தின் கதைக்களம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி, “சமூகப் பொறுப்புணர்வு உள்ள படங்களை நான் தொடர்ந்து எடுப்பேன். மதத்தின் பெயரால் எப்படி சிலர் நம்மைப் பிரிக்க நினைக்கிறார்கள் என்பதை ‘மூக்குத்தி அம்மன்’ பேசும். நிஜ கடவுளுக்கும், மனிதனால் உருவாக்கப்பட்ட கடவுளுக்கும் இடையே நடக்கும் போராட்டமே கதை” என்று கல்லூரி விழா ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Related posts