வடக்கில் இராணுவ சோதனை சாவடிகளால் மக்கள் அவதி

தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநீதிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை சரியான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. தற்போது இலங்கை அரசாங்கம் தான் வழங்கிய இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் இதன் பின்னராவது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கான சூத்திரதாரிகளை இன்னும் கண்டு பிடிக்கவில்லை. அவை பற்றிய ஒழுங்கான அறிக்கை தயாரிக்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை இந்த அரசு கிடப்பில் போட்டு விட்டது. மன்னார் மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களை​ பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

அந்த எலும்புக் கூடுகள் யாருடையது, எந்த காலத்துக்குரியது என்ற நம்பகமான அறிக்கையை வெளியிட இந்த அரசு தயங்குகிறது. வடக்கில் அனைத்துப் பகுதிகளிலும் இராணுவ சோதனைச் சாவடிகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.

யுத்த காலத்தில் இராணுவப் பாதுகாப்பு எப்படி இருந்ததோ அவ்வாறே அனைத்துப் பகுதிகளிலும் உள்ளது. இவ்வற்றை நேரடியாக கண்காணிப்பதற்கு ஐ.நா அலுவலகம் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் திறக்கப்பட வேண்டும். அப்போது தான் தமிழ் மக்களின் ஜனநாயக வாழ்வுரிமை உறுதிப்படுத்தப்படும் என்றார்.

Related posts