டெல்லி வன்முறை: அமெரிக்க அறிக்கை தவறானது : இந்தியா

டெல்லி வன்முறை குறித்து அமெரிக்க குழு அறிக்கை உண்மையில் தவறானது, தவறாக வழி நடத்தப்படுகிறது என இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது.

டெல்லி வன்முறை தொடர்பாக சர்வதேச மத சுதந்திரம் குறித்த அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) கூறியுள்ள கருத்துக்கள் உண்மையில் தவறானது, தவறாக வழி நடத்தப்படுகிறது என்று இந்தியா கூறியுள்ளது.

சர்வதேச மத சுதந்திரம் குறித்த அமெரிக்க ஆணையம்,

டெல்லியில் நடந்துகொண்டிருக்கும் வன்முறைகள் மற்றும் முஸ்லிம்கள், அவர்களின் வீடுகள் மற்றும் கடைகள் மற்றும் அவர்களின் வழிபாட்டு இல்லங்களுக்கு எதிரான தாக்குதல்கள் மிகவும் கவலையளிக்கின்றன. எந்தவொரு பொறுப்புள்ள அரசாங்கத்தின் இன்றியமையாத கடமைகளில் ஒன்று, மதத்தை பொருட்படுத்தாமல், அதன் குடிமக்களுக்கு பாதுகாப்பையும் உடல் பாதுகாப்பையும் வழங்குவதாகும் என கூறி இருந்தது.

இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

டெல்லியில் அண்மையில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணையத்தின் ஊடகங்க பிரிவுகள் மற்றும் ஒரு சில நபர்கள் தெரிவித்த கருத்துகளைப் பார்த்தோம். இவை உண்மையில் தவறானவை, மேலும் அவை பிரச்சினையை அரசியல் மயமாக்குவதை நோக்கி செல்கின்றன என கூறி உள்ளது.

வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறும் போது:-

வன்முறையைத் தடுப்பதற்கும் நம்பிக்கையையும் இயல்பு நிலையையும் மீட்டெடுப்பதை உறுதி செய்வதற்காக எங்கள் அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் மூத்த பிரதிநிதிகள் துரித கதியில் செயல்பட்டு வருகின்றனர். அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்காக பிரதமர் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த முக்கியமான நேரத்தில் பொறுப்பற்ற கருத்துக்கள் தெரிவிக்க வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என கூறினார்.

Related posts