டெல்லி வன்முறை இந்தியாவின் உள் விவகாரம் – டொனால்டு டிரம்ப்

டெல்லியில் வன்முறை குறித்து நான் கேள்விப்பட்டேன்; அது இந்தியாவின் உள் விவகாரம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் அமெரிக்க ஜனாதிபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி அற்புதமான தலைவர். பிரதமர் மோடியுடனான சந்திப்பு சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. இந்திய தொழில் அதிபர்கள் அமெரிக்காவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

எனது வருகை, அனைத்து இந்தியர்களும் விரும்பும் வகையில் உள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தம் தீவிரமாகவே முன்னெடுக்கப்படுகிறது. பயங்கரவாதத்தை ஒழித்து, அமைதியை நிரந்தரப்படுத்துவதே இலக்கு.

இந்தியா மிகப்பெரிய சந்தையை கொண்டுள்ள நாடாகும். பாதுகாப்பு ஆயுத தளவாடங்களை கொள்முதல் செய்வதில் இந்தியா மிகுந்த ஆர்வம் காட்டுகிறது.

பாகிஸ்தான் . மட்டுமின்றி, அனைத்து நாடுகளும் தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும். தீவிரவாதத்தை எந்தவொரு நாடும், எந்த வடிவிலும் ஒருபோதும் ஊக்குவிக்க கூடாது. ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா இயக்க முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மத சுதந்திரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசவில்லை. மத சுதந்திரத்தை நிலைநாட்டுவதில் பிரதமர் மோடி அயராது பாடுபடுகிறார். மக்கள் மத சுதந்திரத்துடன் வாழ்வதையே விரும்புவதாக பிரதமர் மோடி கூறினார். டெல்லியில் தாக்குதல் குறித்து நான் கேள்விப்பட்டேன்; அது இந்தியாவின் உள் விவகாரம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related posts