நல்லிணக்கம் பொறுப்புக்கூறலில் இருந்து இலங்கை விலகுவதாக கூறியது..!

40/1 தீர்மானத்திற்கு வழங்கிய இணை அனுசரணையை இலங்கை அரசாங்கம் திரும்பப் பெறுவதற்கான தீர்மானம் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவரான தூதுவர் எலிசபெத் டிச்சி -பிஸ்ல்பெர்கருக்கு விளக்கினார்.

கடந்த புதன் கிழமை (17) இது தொடர்பில் அமைச்சரவையில் மேற்கொண்ட தீர்மானம் பற்றி இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளரினால் ஐ நா மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்கு தெரியப்படுத்தப்பட்டதாக ஐ.நாவிலுள்ள இலங்கையின் வதிவிட பிரதிநிதி நேற்று (23) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை (24) ஆரம்பமாகவுள்ளது. ஐ.நாவிலுள்ள இலங்கையின் வதிவிட பிரதிநிதியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவைத் தலைவரை சந்தித்தார். எதிர்வரும் திங்கட்கிழமை (24) ஆரம்பமாகவிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வுக்கு முன்னதாக, 2015 அக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 2017 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட 34/1 ஆகிய பிந்தைய தீர்மானங்களை தோற்றுவித்த, ´இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்´ குறித்த 2019 மார்ச் மாத 40/1 தீர்மானத்திற்கு வழங்கிய இணை அனுசரணையை இலங்கை அரசாங்கம் திரும்பப் பெறுவதற்கான தீர்மானம் குறித்து வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க மனித உரிமைகள் பேரவையின் தலைவரான தூதுவர் எலிசபெத் டிச்சி-பிஸ்ல்பெர்கருக்கு விளக்கினார்.

கடந்த புதன்கிழமை வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த அமைச்சரவை விஞ்ஞாபனத்தைத் தொடர்ந்து இந்தத் தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்ததாக தற்போது ஜெனீவாவில் இருக்கும் வெளிவிவகார செயலாளர் மனித உரிமைகள் பேரவையின் தலைவரிடம் வெள்ளிக்கிழமை (21) தெரிவித்தார். இந்தத் தீர்மானம் வியாழக்கிழமை பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டது. மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வுக்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு அமைச்சர் குணவர்தன தலைமை தாங்குவார் என்றும், பெப்ரவரி 26 புதன்கிழமை சபையின் உயர் மட்ட அமர்வில் உரையாற்றும்போது அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தை சபையின் உறுப்பினர்களுக்கு முறையாக அறிவிப்பார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பெப்ரவரி 27 ஆம் திகதி உயர்ஸ்தானிகரால் மேற்கொள்ளப்படவுள்ள இலங்கை குறித்த வாய்மூல தகவல் புதுப்பித்தல்களுக்கு பதிலளிக்கும் அமைச்சர் குணவர்தன, ஜெனீவாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்சலெட்டை சந்திக்கவுள்ளார்.

அமைச்சரவையின் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்படுகையில், ஐ.நா. தீர்மானத்தை மேற்கொள்வதற்கு வழிவகுத்த ´மையக் குழுவின்´ (இங்கிலாந்து, ஜேர்மனி மற்றும் கனடா) கொழும்பில் வதியும் தூதுவர்களுக்கு இது குறித்து அமைச்சர் குணவர்தனவினால் விளக்கப்பட்டதாக வெளிவிவகார செயலாளரால் அவருக்கு மேலும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விடயம் குறித்து தனக்கு விளக்கமளிப்பதற்கான இலங்கையின் முயற்சியை தூதுவர் டிச்சி-பிஸ்ல்பெர்கர் பாராட்டினார்.

Related posts