விஜய்க்கு வரித்துறை 3 நாட்களுக்குள் ஆஜராக உத்தரவு

வீடு, அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரிப்பதற்காக நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் உள்பட 3 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. 3 நாட்களுக்குள் ஆஜராக அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அசையா சொத்து ஆவணங்களின் மதிப்பு எவ்வளவு? இதன் மூலம் அதன் உரிமையாளர்களுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு? உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வைத்து உள்ளனர்.

இதுதவிர பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணம் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்டு உள்ளது. இதில் அன்புசெழியன் ரூ.165 கோடி வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம், ஆகியோருக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்காக அடுத்த 3 நாட்களில் நேரில் ஆஜராக அவர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

எனவே நடிகர் விஜய் உள்பட 3 பேரும், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்துக்கு இன்று(திங்கட்கிழமை) அல்லது நாளை(செவ்வாய்க்கிழமை) அல்லது நாளை மறுநாள் நேரில் வந்து அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts