சமாதானம் என்றால் சமாதானம், போர் என்றார் போர்

சமாதானம் என்றால் சமாதானம்; போர் என்றால் போர்: குழந்தைகள் உள்பட அனைவரும் போருக்குத் தயார் என பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகமான ‘ஜியோ நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதிலிருந்தே பாகிஸ்தான் இந்தியாவை கடுமையாக விமர்சித்து வருகிறது. அறிவிப்பு வெளியான நாளிலிருந்து பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தக, போக்குவரத்து உறவுகளைத் துண்டித்துக்கொண்டது. தூதரக அதிகாரிகளையும் வாபஸ் பெற்றது.

லாகூர்-டெல்லி ‘தோஸ்தி’ பஸ் சேவையான சம்ஜவுதா எக்ஸ்பிரஸையும் பாகிஸ்தான் நிரந்தரமாக நிறுத்தி வைத்துள்ளது, மேலும் இந்தியாவுடனான கடைசி ரயில் இணைப்பான தார் லிங்க் எக்ஸ்பிரஸையும் நிறுத்திவிட்டது. இதைத் தொடர்ந்து காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் ஐநாவிற்கும் கொண்டுபோக முயற்சித்தது.

எனினும் அங்கு காஷ்மீர் பிரச்சினையை முக்கிய விவாதப் பொருளாக யாரும் எடுத்துக்கொள்ளவில்லை. காஷ்மீரில் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் தொடர்ந்து இந்தியா மீது பாகிஸ்தான் எதிர்ப்புக் கருத்துக்களை தெரிவித்து வருகிறது.
லாகூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாத் சவுத்ரி கூறியதாவது:

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணுசக்தி சக்தி நாடுகளும் தற்போது உறுதியாக எதிரெதிர் திசையில் நிற்கின்றன. காஷ்மீர் பிரச்சினையை சரியான முறையில் தீர்வுகான உலக நாடுகளின் முயற்சி அவசியமாகும்.

இந்தியா சமாதானத்தை விரும்பினால், நாங்கள் சமாதானத்துக்கு தயாராக இருக்கிறோம், ஆனால் அவர்கள் போரை விரும்பினால், நாங்களும் போருக்கு தயாராக இருக்கிறோம். எங்கள் ராணுவமும், குழந்தைகள் உட்பட அனைவரும் போராட தயாராக உள்ளனர்” என்று தெரிவித்தார்.

பாக்.ரயில்வே அமைச்சர் பேச்சு
பாக். ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் நேற்று முசாபராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ”இந்தியா பாகிஸ்தானை தாக்கினால். அத்தகைய நேரம் வந்தால் அப்போது பாகிஸ்தானின் மக்கள் ராணுவத்துடன் தோளோடு தோள் நிற்பார்கள்.
குறிப்பாக இந்தியா ‘ஆசாத் காஷ்மீர்’ மீது தாக்குதல் நடத்தினால் தெற்காசியாவின் இரு அண்டை நாடுகளுக்கு இடையேயான ஒரு போர் என்று அது கருதப்படும், அப்போது பாகிஸ்தான் இந்தியாவுக்கு பொருத்தமான பதிலை அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Related posts