காஷ்மீர் பிரிப்பு: நடிகர் விஜய் சேதுபதி எதிர்ப்பு

நடிகர் விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் ஆஸ்திரேலியாவில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதில் அவருக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது. அங்கு விஜய் சேதுபதி அளித்த பேட்டி வருமாறு:-

“சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்தேன். கமல்ஹாசன் அவ்வை சண்முகியில் பெண் வேடத்தில் வந்து இருக்கிறார். எனவே நான் புதிதாக எதையும் செய்யவில்லை. சினிமாவால்தான் நடிகர்களுக்கு இமேஜ் கிடைக்கிறது. நாம் தொழிலை எப்படி அணுகுகிறோம் என்பது முக்கியம்.

வெற்றி பெறுமா? பின்னால் பாதிப்பு வருமா? என்று நினைத்து ஒரு வேலையை செய்யவே முடியாது. கடின உழைப்பை தாண்டி ரசனையோடு அணுகினால்தான் சினிமா உங்களுக்கு நெருக்கமாக இருக்கும். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடிக்கிறேன். கலைக்கு மொழி கிடையாது. முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்திலும் நடிக்க உள்ளேன்.

கிரிக்கெட்டை தாண்டி தனிப்பட்டவர் வாழ்க்கையை அந்த படம் பேசும். படத்தை பார்ப்பவர்கள் எதிர்க்க மாட்டார்கள்.

காஷ்மீர் பிரிப்பு ஜனநாயகத்துக்கு எதிரானது. மன வருத்தத்தை அளிக்கிறது. பெரியார் அன்றைக்கே சொல்லி விட்டார். அந்தந்த பகுதி பிரச்சினையில் அங்குள்ள மக்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். உங்கள் வீட்டு பிரச்சினையில் நான் தலையிட கூடாது. நான் உங்கள் மீது அக்கறை செலுத்தலாம். ஆனால் ஆளுமை செலுத்த கூடாது.”

இவ்வாறு விஜய் சேதுபதி கூறினார்.

Related posts