5 மாதங்கள் மாயமாகி இருந்த முகிலன் சிக்கியது எப்படி?

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன். சமூக ஆர்வலரான இவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய வீடியோவை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி வெளியிட்டார்.

அன்றைய தினம் இரவு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு ரெயிலில் சென்றபோது திடீரென முகிலன் மாயமானார். சுமார் 5 மாதங்கள் அவர் எங்கிருக்கிறார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இந்த நிலையில் தான் கடந்த 6-ந் தேதி திருப்பதி ரெயில் நிலையத்தில் முகிலன் மீட்கப்பட்டார். தற்போது பாலியல் புகாரில் முகிலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகிலனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நெருங்கியது எப்படி என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

முகிலனின் சொந்த ஊரான சென்னிமலையில் அவருடைய மனைவி பூங்கொடி வசித்து வருகிறார். அவருடைய மகன் கார்முகில் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர்களுடைய செல்போன்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தார்கள். மேலும் ஒட்டுமொத்த முகிலனின் குடும்பத்தையும் தங்களுடைய கண்காணிப்பில் கொண்டு வந்தார்கள்.

இது தவிர சென்னிமலையில் உள்ள முகிலனின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களையும் கண்காணிக்க சில நாட்கள் மாறுவேடத்தில் அங்கேயே தங்கியிருந்தார்கள். அப்போது வேறு செல்போன் எண்களில் இருந்து முகிலன் மற்றவர்களின் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் உயிரோடு இருப்பது உறுதியானது.

அதன்பின்னர் செல்போன் சிக்னல்களை வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நாடு முழுவதும் விசாரணையை முடுக்கிவிட்டார்கள். இந்த நிலையில்தான் முகிலன் பயன்படுத்தி வரும் செல்போன் சிக்னல் திருப்பதியில் காட்டியது. உடனே திருப்பதி போலீசாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் உஷார் படுத்தினார்கள்.

இதற்கிடையே தன்னை போலீசார் மோப்பம் பிடித்துவிட்டதை முகிலனும் அறிந்துகொண்டார். உடனே திருப்பதி ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் நின்றிருந்த ஒரு ரெயில் என்ஜின் முன்புறம் அமர்ந்துகொண்டு கூடங்குளம் அணு உலைக்கும், ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கும் எதிரான கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது ரெயில்வே போலீசார் முகிலனை தண்டவாளத்தில் இருந்து வலுக்கட்டாயமாக தூக்கி இழுத்து வந்து விசாரித்தார்கள். அப்போது அவர்தான் முகிலன் என்று தெரிந்தது. உடனே அவரை வேலூருக்கு அழைத்து சென்று ஒப்படைத்தார்கள். அவர்கள் முகிலனை சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தார்கள்.

கைதான முகிலன் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் தான் சிலரால் கடத்தப்பட்டதாக கூறியுள்ளார். அப்படி கடத்தப்பட்டார் என்றால், அவரை கடத்தியவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? என்பது தெரியவில்லை. மேலும் முகிலன் மீது ஒரு பெண் பாலியல் புகார் கூறியுள்ளார். அதற்காகத்தான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இருந்து தப்பித்துக்கொள்ள தலைமறைவாக இருந்து அவர் நாடகம் ஆடினாரா? என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.

சி.பி.சி.ஐ.டி. போலீசில் முகிலன் உண்மையான வாக்குமூலம் அளித்தால்தான் இத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

Related posts