கொலை வழக்கில் சரவண பவன் ராஜகோபால் சரணடைய உத்தரவு

கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சரவண பவன் ராஜகோபால் உடனே சரணடைய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் சரண் அடைவதில் இருந்து விலக்கு கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் அவர் கோர்ட்டில் சரண் அடையவில்லை. அவரைத்தவிர 9 பேர் சரண் அடைந்தனர்.

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய, ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு சென்னை ஐகோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை கடந்த ஏப்ரல் 29-ந் தேதியன்று சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் என்.வி.ரமணா, மோகன் எம்.ஷாந்தனு கவுடர், இந்திரா பானர்ஜி ஆகியோர் இந்த தீர்ப்பை பிறப்பித்தபோது ராஜகோபாலின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவர் சரணடைவதற்கு கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஜூலை 8-ந் தேதிக்குள் ராஜகோபால் சரணடைய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

இதன்படி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று அவர் ஆஜராகவில்லை. இதற்கிடையே, ராஜகோபால் நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், மருத்துவ சிகிச்சையில் உள்ள அவரை உடனே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இயலாது என்றும், அவரது தரப்பில் மேலும் கால அவகாசம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் என்.வி.ரமணா, அஜய் ரஸ்தோகி அமர்வில் விசாரணைக்கு நேற்று வந்தது. விசாரணை தொடங்கியதும் மனுதாரர் ராஜகோபால் தரப்பில் இந்த வழக்கில் ஆஜராகும் மூத்த வக்கீல் கபில் சிபல் வேறு ஒரு வழக்கில் ஆஜராக வேண்டி இருப்பதால் சிறிது கால அவகாசம் கோரப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர். அதன் படி இன்று மனு விசாரணைக்கு வந்ததும், ராஜகோபாலின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. அந்த மனுவில் உடல்நிலையை காரணம் காட்டி தண்டனை காலம் முழுவதையும் மருத்துவமனையிலேயே கழிக்க கோரிக்கை விடுத்திருந்தார்.

Related posts