இஸ்லாமிய விரோதிகளை வைத்து முஸ்லிம்களைக் கணிப்பிடக் கூடாது

சிறு குழுவினர் செய்த காரியத்தை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் அளவிடக்கூடாது. தமது சமூகத்தில் உள்ள விடயங்களை சுய பரிசீலனை செய்ய ஆரம்பித்திருப்பதாக முஸ்லிம் தலைவர்கள் தெரிவித்தனர்.

ஏப்ரல் 21ஆம் திகதி முஸ்லிம்கள் எனக் கூறிக் கொள்ளும் சிறியதொரு குழுவினர் மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்களை நடத்தினர். அதன் பின்னர் சில தினங்களுக்கு முன்னர் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சிறியதொரு குழுவினரே வன்முறைகளில் ஈடுபட்டனர். எனவே சிறியதொரு குழுவை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த இனத்தையும் அளவிட முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்கள் இலங்கை மன்றக் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட முஸ்லிம் தலைவர்களான அமைச்சர் கபீர் ஹாசிம், முன்னாள் அமைச்சர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கர், பேரியல் அஷ்ரப் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தனர். அமைச்சர் பதவி மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் முஸ்லிம் பிரதிநிதிகள் என்ற அடிப்படையிலேயே தாம் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

முஸ்லிம் கலாசாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், மதரசாக்களை நிர்வகிப்பது குறித்த சட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்களில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு முஸ்லிம் சமூகமே தானாக முன்வந்துள்ளது.

இருந்தபோதும் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சில நடவடிக்கைகள் அவர்களை பயங்கரவாதத்தின் பக்கம் தள்ளுவதற்கு இடமளிக்கக் கூடாது. முஸ்லிம் சமூகம் தன்னைத்தானே சுய பரிசீலனை செய்யத் தயாராகியுள்ளது. இதேபோல ஏனைய சமூகங்களும் தம்மைத் தாமே சுய பரிசீலனை செய்ய முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

அமைச்சர் கபீர் ஹாசிம்

இஸ்லாம் மதத்துக்கு விரோதமாகச் செயற்பட்ட சிலரே ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல்களை நடத்தினர். இவர்களை வைத்துக் கொண்டு சாதாரண முஸ்லிம்களை கணிப்பிடக்கூடாது. அதேபோல வன்முறைகளில் ஈடுபட்ட சிறு சிங்களக் குழுவினரை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த சிங்களவர்களையும் கணிப்பிடக்கூடாது. இந்த நிலைமைகளிலிருந்து மீண்டு இலங்கையர் என்ற நிலைப்பாட்டை எமக்கிடையில் கட்டியெழுப்புவது அவசியமாகும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் கவலையளிக்கின்றன. இதனைவிட ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களே எம்மை அதிகமாகக் கவலைக்கு உள்ளாக்கின.

இதில் ஒட்டுமொத்தமாக முஸ்லிம் சமூகமே பாதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் எமது மார்க்கத்தை பின்பற்றவில்லை. இவ்வாறான அடிப்படைவாதிகள் தொடர்பில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபை 2012ஆம் ஆண்டிலிருந்தே தகவல்களை வழங்கியுள்ளது. எனினும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்ற குறைபாடு உள்ளது.

மறுபக்கத்தில் தாக்குதல்களின் பின்னர் மதரசாக்களை நிர்வகிப்பதற்கு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற விடயம் வலியுறுத்தப் படுகிறது. இதற்காக முஸ்லிம் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் புத்திஜீவிகள் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தேசிய பாதுகாப்புக்காக “புர்கா” போன்ற உடைகளை அணிய வேண்டாம் என ஜம்இயதுல் உலமா அறிவித்துள்ளது.

முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்ட கலாசார வேறுபாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட வேண்டியுள்ளது. இவை தொடர்பில் நாம் சுய விமர்சனம் செய்வதுடன், சுய பரிசோதனை செய்வதற்கும் தயாராகியுள்ளோம்.

இலங்கையில் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்பட்டு இனங்களுக்கிடையில் முரண்பாடு தோன்ற வேண்டும் என்பதே ஐ.எஸ்.ஐ.எஸின் எதிர்பார்ப்பாகும். இதற்கு இடமளிக்காது அனைத்து இனத்தவர்களும் ஒன்றிணைந்து இலங்கையர்கள் என்ற எண்ணத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

———ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி

இலங்கையில் செயற்படும் மதரசாக்களில் கற்பிக்கப்பட வேண்டிய பாடநெறி, அதற்கு பணம் கிடைக்கும் வழிகள், அங்கு கல்வி கற்போரின் விடயங்களை பகிரங்கப்படுத்தும் வகையிலும், அவர்களை நிர்வகிக்கும் வகையிலும் சட்டம் கொண்டுவரப்படுவது அவசியமானது என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை முஸ்லிம் சமூகம் வன்மையாகக் கண்டிக்கிறது. திறந்த பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்கு வந்ததும் பலர் சவூதி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று வருகின்றனர்.

இதனால் எமக்குத் தெரியாமலேயே முஸ்லிம் கலாசாரங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கு எப்படி முகம் கொடுப்பது என நாம் யோசிக்கின்றோம்.

முஸ்லிம் சமூகத்துக்குள் நாம் திறந்த மனதுடன் கலந்துரையாடி வருகின்றோம். “புர்கா” தடை கொண்டுவரப்பட முன்னர் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு இவ்வாறான ஆடைகளை தவிர்க்க வேண்டும் என ஜம்இய்யதுல் உலமா சபை முதலே தீர்மானித்துவிட்டது. இது மாத்திரமன்றி பல விடயங்கள் குறித்து முஸ்லிம் சமூகத்துக்குள்ளேயே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் நடுநிலையாக இருக்கும் ஒருவரைக் கூட நாம் பயங்கரவாத்தின் பக்கம் தள்ளினால் ஒட்டுமொத்த சமூகமாக நாம் தோல்வியடைந்தவர்களாகிவிடுவோம்.

கடந்த வருடம் இடம்பெற்ற திகன சம்பவத்தின் பின்னர் பயங்கரவாதிகளுடன் பல முஸ்லிம் இளைஞர்கள் இணைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடிப்படைவாதத்தினால் அடிப்படைவாதம் பலப்படுத்தப்படுகிறது.

பயங்கரவாதத்தினால் பயங்கரவாதம் பலப்படுத்தப்படுகிறது. ஒழிந்திருக்கும் இந்த நிகழ்ச்சி நிரலுக்கு நாட்டிலுள்ள மக்கள் தொடர்ந்தும் ஏமாறத் தேவையில்லை.

முஸ்லிம் சமூகத்தினருக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. சில விடயங்கள் முஸ்லிம் சமூகத்துக்குள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன. சில விடயங்கள் ஏனைய சமூகங்களுடன் செய்யப்பட வேண்டியவை. இந்த மாற்றங்களை பாடசாலைகளிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். பௌத்த, முஸ்லிம், கத்தோலிக்க பாடசாலைகள் என மாணவர்களை சிறுவயதிலிருந்து பிரித்து வைத்துவிட்டு 13 வருடங்களின் பின்னர் நல்லிணக்கம் என ஒன்றிணையுமாறு கோருவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இதற்காகக் காணப்படும் சவால்களை நிறைவேற்றுவதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

——-

முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப்

நாம் எமக்குள் மேற்கொள்ளவேண்டிய கடப்பாடுகளை சரியாகச் செய்யவில்லையா என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்தார். வேறு யாராவது இதனைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என ஒப்படைத்துவிட்டு அமைதியாக இருந்துவிட்டோம் என்று எண்ணத் தோன்றுகின்றது.

இதனால் தற்பொழுது தோன்றியுள்ள சூழ்நிலைய சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி எமது கடமையை சரியாக நிறைவேற்றுவதற்கு தீர்மானித்துள்ளோம்.

நாம் ஏனையவர்களிடமிருந்து எந்தளவுக்கு மாறியுள்ளோம் என்பதை எமக்குள்ளேயே கேள்வி கேட்டுத் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதனை சரியாகப் பயன்படுத்தி இந்த நிலைமைகளிலிருந்து மாறுபடுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனக் கூறினார்.

———

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர்

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்கள் மற்றும் கடந்த சில தினங்களுக்கு முன்னரான வன்முறைச் சம்பவங்கள் அரசியல் நோக்கத்தில் முன்னெடுக்கப் பட்டவையா? பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டவையா? சர்வதேச போட்டியின் வெளிப்பாடா? போன்ற விடயங்களை பற்றி ஆராயாது தூர நோக்குடன் பார்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் தெரிவித்தார்.

அடுத்த தலைமுறைக்கு எவ்வாறானதொரு சூழலைக் கொடுத்துவிட்டுப் போகப்போகின்றோம் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். இலங்கை வரலாற்றில் ஏழு அல்லது எட்டு வருடங்களுக்கு ஒருமுறை இதுபோன்ற குழப்பங்கள் ஏற்பட்டே வருகின்றன.

இவ்வாறான நிலைமையிலிருந்து நாட்டை மீட்டெடுத்து அடுத்த தலைமுறைக்கு எதனை கையளிக்கப் போகின்றோம்.

இனங்களுக்கிடையில் காணப்படும் வேறுபாடுகளைப் பற்றி ஆராயாமல், ஒற்றுமைகளை எவ்வாறு பகிர்ந்துகொள்வது அல்லது அவற்றைப் பலப்படுத்துவது என்பது பற்றியே சிந்திக்க வேண்டும்.

அதேநேரம் சில ஊடகங்கள் எரியும் நெருப்பில் பெற்றோலை ஊற்றுவது போன்று செயற்படுகின்றன. சகலரும் சிந்தித்து செயற்பட வேண்டும்.

பாடசாலைகள் இன, மத ரீதியாக பிரிக்கப்படாது தேசிய ரீதியான பாடசாலைகளாக இருக்கவேண்டும். இதன் ஊடாகவே நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற எண்ணப்பாடு தோன்றும் என்றார்.

மகேஸ்வரன் பிரசாத்

Related posts