இன்றைய காலை சிறீலங்கா செய்திகளின் தொகுப்பு

கிளிநொச்சி, கனகாம்பிகை குளம் பகுதியில் இன்று (29) அதிகாலை சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 4 மணியளவில் கனகாம்பிகைக்குளம் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியை சுற்றி இச்சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

கிளிநாச்சி பொலிஸாரும், படையினரும் இணைந்து இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, பயன்பாட்டில் இல்லாத வீடு ஒன்றிலிருந்து சில சந்தேகத்திற்கிடமாக பொருட்கள் சோதனையின் போது மீட்கப்பட்டது, கையடக்க தொலைபேசிகள், கமரா, ரவைகள் உள்ளிட்ட சில பொருட்கள் மீட்கப்பட்டன.

எனினும் குறித்த வீட்டில் தங்கியிருப்பவர் இரும்பு வியாபாரி என அப்பகுதி மக்கள் அடையாளம் காட்டினர்.

இதேவேளை கமரா, தொலைபேசி ஆகியன அவர் பயன்படுத்தியது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வருகின்றது. எனினும் சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

————-

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை அடுத்து, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

————

மன்னார் நகரின் பல்வேறு இடங்களில் இன்று திங்கட்கிழமை (29) காலை 6 மணி முதல் முப்படையினரும் இணைந்து கடும் சோதனைகளையும்,தேடுதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

உப்புக்குளம், நளவன் வாடி, பள்ளிமுனை, மூர்வீதி ஆகிய கிராமங்களில் இன்று திங்கட்கிழமை(29) காலை 6 மணி முதல் பல நூற்றுக்கணக்கான இராணுவம், பொலிஸார், கடற்படையினர் இணைந்து வீதிகளை மறித்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அக்கிராமங்களில் உள்ள வீடுகளுக்குச் செல்லும் படையினர் வீட்டில் உள்ள உடமைகளை முழுமையாக சோதனைக்கு உற்படுத்தியுள்ளதோடு,வீட்டில் உள்ளவர்களின் விபரங்களையும் பரிசீலினை செய்துள்ளனர்.

மேலும் வீதியால் செல்லுபவர்களின் அடையாள அட்டை பரிசீலினை செய்யப்படுவதோடு,மோட்டார் சைக்கில் உள்ளிட்ட ஏனைய வாகனங்களும் சோதனைக்கு உற்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிமுனை-உப்புக்குளம் பிரதான வீதியில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு சோதனைகள் இடம் பெற்று வருகின்றது.

இதனால் குறித்த கிராம மக்களின் இயல்பு நிலை இன்றைய தினம் பாதீக்கப்பட்டுள்ளது.மேலும் மன்னாரில் பல்வேறு கிராமங்களில் சோதனைகளை மேற்கொள்ள படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

———–

பயங்கரவாதத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறிப்பிட்ட சில அடிப்படைவாதிகளே சம்பந்தப் பட்டிருப்பதாகவும் நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் இதில் தொடர்புபடவில்லை எனவும் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சகல சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் இணைந்தே செயற்பட்டு வருவதை வரலாறு நெடுகிலும் காணக்கூடியதாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்தத் தாக்குதல்கள் திட்டமிட்ட அடிப்படையிலே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமைப்பு ரீதியாக சிறியதொரு குழுவே இதனை மேற்கொண்டுள்ளது. அவர்கள் சாதாரண முஸ்லிம்கள் அல்ல. திசைமாறித் திரியும் அடிப்படைவாத குழுக்களாவர். மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளை படுகொலை செய்து அவர்கள் இந்தக் குற்றச் செயல்களை ஆரம்பித்தனர். இது கடந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர் மாவனல்லைப் பகுதியில் புத்தர் சிலைகளை உடைத்தும் அமைச்சர் கபீர் ஹாசிமின் முஸ்லிம் விவகாரங்களுக்கான செயலாளர் மீதும் இவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

Related posts