சம்மாந்துறை வீட்டில் மீட்கப்பட்ட பொருட்களின் பட்டியல் வெளியீடு

நேற்றைய தினம் (26) சம்மாந்துறையிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், தீவிரவாதிகளுடையது என தெரிவிக்கப்படும் 119 பொருட்களின் பட்டியலை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.

இதில் தற்கொலை குண்டுதாரிகள் வெளியிட்டதாக தெரிவிக்கப்படும் வீடியோ காட்சியில் காணப்படும், ISIS சின்னத்துடனான கறுப்பு திரை மற்றும் அவர்கள் அணிந்திருந்த கறுப்பு உடைகள் ஆகியன மீட்கப்பட்டிருந்தன.

அரசாங்க புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (26) பிற்பகல் பொலிசார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனையில் சுமார் ஒரு இலட்சம் சன்னங்கள் (சிறிய இரும்பு கோளங்கள்), 150 ஜெலிக்னைற் குச்சிகள், ட்ரோன் கமெரா, லெப்டொப் ஒன்று, உள்ளிட்ட 119 பொருட்கள் மற்றும் வேன் ஒன்றும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

——————

குண்டுவெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நாவலபிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொஹமட் சாதிக் அப்துல் ஹக் மற்றும் மொஹமட் சாஹித் அப்துல் ஹக் என்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குண்டுவெடிப்பினை மேற்கொண்டு தலைமறைவாகியிருந்த இரண்டு பிரதான சந்தேக நபர்கள் உட்பட சந்தேக நபர்கள் பயணித்த வேன் வண்டியும் வேன் வண்டியினை செலுத்திய சாரதியோடு மூன்று பேர் நாவலபிட்டி பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிசார் தெரிவித்தனர்.

இந்த கைது சம்பவம் இன்று (28) விடியற்காலையில் இடம்பெற்றதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை குறித்து நாவலபிட்டி நகரில் உள்ள பள்ளிவாசல்,அரபுகல்லூரிகள்போன்ற சந்தேகத்துக்கு இடமான இடங்களில் நேற்று (27)நாவலபிட்டி பொலிஸார்,இராணுவத்தினர்,விஷேட அதிரடி படையினர் ஆகியோர் இணைந்து மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகமான முறையில் வேன் வண்டி ஒன்று மீட்கபட்டுள்ளதோடு, வேன் வண்டியின் சாரதியையும் நாவலபிட்டி பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யபட்ட வேன் சாரதியிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது,கொழும்பில் மேற்கொள்ளபட்டகுண்டுவெடிப்புடன்சம்பந்தப்பட்டவர்கள் இருவர் கம்பளை பகுதியில் உள்ள பாதணி விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தில் தலைமறைவாகியுள்ளதாகவும் குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் நான் தான் வேனில் ஏற்றிவந்ததாகவும் இவர்கள் இரண்டு பேரும் சகோதரர்கள் என பொலிசாருக்கு வேன்சாரதி வாக்குமுலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியினால் வழங்கபட்ட வாக்குமுலத்தின் மூலமாக கம்பளை பகுதியில் உள்ள பாதணி விற்பனை நிலையத்தைநாவலப்பிட்டி பொலிஸார் சுற்றிவளைத்தனர். மூடப்பட்டு இருந்தது வர்த்தக நிலையத்தின்பூட்டினை உடைத்து உட்புகுந்த பொலிசார் இரண்டு பிரதான சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக நாவலபிட்டி பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

————–

தீவிரவாத தாக்குதல்களுக்கு தலைமை வகித்த மொஹம்மட் ஸஹ்ரான் என்பவரின் சாரதியை கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

‘கபூர்’ என அழைக்கப்படும் மொஹம்மட் ஷரீப் ஆதம்லெப்பை (53) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

குறித்த நபர், காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து, காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, ருவன் குணசேகர தெரிவித்தார்.

Related posts