அலைகள் வாராந்தப் பழமொழிகள் 20.04.2019

01. தலைமைப்பதவி வேண்டுமா.. அதற்கு சுய வளர்ச்சிக்கான ஒரு தெளிவான பயிற்சித்திட்டம் உங்களிடம் இருக்க வேண்டும். தேக்கமடைந்து நிற்பதும், முன்னேறுவதும் உங்கள் சுய விருப்பம். நேரத்தை செலவிடவும், தியாகம் புரியவும் நீங்கள் தயாராக இல்லாவிட்டால் தேங்கி நிற்பதை தவிர்க்க முடியாது.

02. முன்னேற்றத்திற்கு மூன்று வழிகள் உள்ளன.. 01. என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தல் வேண்டும் 02. அதை எப்படி செய்ய வேண்டும் என்ற வழி முறை இருக்க வேண்டும் 03. அது விளைவுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

03. நீங்கள் அப்படி செயற்பட்டால் உங்கள் குடும்பம் உங்களை மதிக்கும், நண்பர்கள் உங்களை கண்டு பிரமிப்பர், மற்றவர்களுக்கு பயனுள்ளவராக நீங்கள் இருக்கிறீர்கள் என்ற மன நிறைவு ஏற்படும். நீங்கள் ஓர் அந்தஸ்த்தை பெற்றிருப்பதைப் போல உணர்வீர்கள். வருமானமும் கூடும்.

04. உங்கள் வெற்றிக்கான பயிற்சியை நீங்கள்தான் மேற்கொண்டாக வேண்டும். உங்களை யாரும் கண்காணிக்கப் போவதில்லை. நீங்கள்தான் உங்களுக்கு கட்டளையிட வேண்டும். தவறு நடந்தால் நீங்களே திருத்தவும் வேண்டும். மாபெரும் வெற்றியை பெற உங்களுக்கு நீங்களே பயிற்சி கொடுக்க வேண்டும்.

05. உங்கள் பரிசோதனைக் கூடம் அருகில் உள்ள மக்களும், சமுதாயமும்தான். உங்களை ஓர் அறிவியல் அறிஞராக பார்க்கத் தொடங்கிவிட்டால் நீங்கள் கற்க வேண்டிய விடயங்களுக்கு எல்லையே இருக்காது.

06. உங்கள் பரிசோதனைக் கூடம் செலவில்லாமல் உருவாகிறது. நீங்கள் உங்களை சுற்றியுள்ள விஷயங்களை கவனிக்கவும் ஆய்வு செய்யவும் தொடங்குவீர்கள். அதுதான் செலவற்ற ஆய்வு கூடம்.

07. நீங்கள் மக்களை கூர்ந்து பார்த்தால் ஒரு விஷயத்தை அறிவீர்கள். பெரும்பாலான மக்கள் ஒரு விடயத்தை கூர்ந்து பார்க்காமலே வாழ்ந்து வருவதை கண்டுபிடிக்கலாம். அரசியல்வாதிகள் ஏமாற்றிப் பிழைக்க என்ன காரணம்..?டி மக்களுக்குள்ள இந்த தேசிய நோய்தான் காரணம். இதை வைத்துக் கொண்டு தேசியம் பேசும் நிறையப் பேர் இருக்கிறார்கள் நம் அருகில்.

08. ஏன் ராமன் பணக்காரனாக இருக்கிறான், கோபால் ஏழையாக இருக்கிறான். ஏன் கண்ணன் சொல்வதை மக்கள் கேட்கிறார்கள் மன்னன் சொல்வதை கேட்பதில்லை. இதை அவதானியுங்கள் செய்ய வேண்டியதை கண்டு பிடிப்பீர்கள்.

09. நீங்கள் முன்னேறுவதை கண்டு பிடிக்கும்போதுதான் வாழ்க்கையில் ஒரு குதூகலமே வருகிறது.

10. வெற்றிக்கும் சாதனைக்கும் உரிய பாதையில் நீங்கள் பயணிக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பதைவிட மன நிறைவைக் கொடுக்கக் கூடியது வாழ்வில் எதுவுமே இல்லை.

11. உங்களுடைய ஆற்றலையும் திறமையையும் முழுமையாக பயன்படுத்துவதைவிட சவாலான விடயம் உலகில் எதுவுமே இல்லை.

12. தோல்விக்கு வழி சமைக்கும் சாக்குப் போக்கில் இருந்து உங்களை நீங்களே விடுவித்துக் கொள்ளுங்கள்.

13. நீங்கள் வெற்றியாளராக வேண்டுமானால் மக்களை அவதானித்து அவர்களுடைய வெற்றிச் சிந்தனைகளை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

14. தோல்வியாளன் ஒரு மிகப்பெரிய நோயால் அவதிப்படுவதை நீங்கள் காண்பீர்கள்.

15. தோல்வியாளன் பார்க்கலாம் என்று சாக்கு போக்கு சொல்வான். இதுதான் முற்றிய நோய்க்கான அடையாளமாகும். சராசரி நபர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த நோய் சிறியளவிலாவது இருக்கும்.

16. தொடர்ந்து முன்னேறும் ஒருவனுக்கும் அப்படியே நிற்கும் ஒருவனுக்கும் உள்ள வேறுபாடு இந்த சாக்கு போக்கு கூறுவதுதான்.

17. ஒருவர் எவ்வளவு வெற்றியாளராக இருக்கிறாரோ அவ்வளவுக்கு சாக்கு போக்கு கூறும் ஒருவராக இருப்பார்.

18. ஒரேயிடத்தில் செக்குமாடு போல சுற்றும் ஒருவர் தான் எங்கே சென்றடைய வேண்டும் என்பதற்கு எந்தவொரு திட்டமும் இல்லாத பேர்வழியாக இருக்கக் காணலாம்.

19. பல நூற்றாண்டுகளாக ஒரே விடயத்தை ஒரேமாதிரி செய்யும் இனங்கள் தோற்கடிக்கப்படுவதை வரலாற்றில் நீங்கள் தெளிவாக பார்க்கலாம்.

20. பல வெற்றியாளர்கள் நோயை காரணம் காட்டி ஒதுங்கியிருக்க முடியும்.

21. முறையான காரணம் காட்டாவிட்டால் சாக்குப் போக்கு கூறும் நோயும் மேலும் மோசமடையும்.

22. தோல்வி நோயை கொண்ட ஒருவர் நல்ல சாக்கு போக்கை கண்டு பிடித்ததும் அதை உடும்புப் பிடிபோல பற்றிக் கொள்கிறார்.

23. தான் முன்னேறாமைக்கு இதுவே காரணமென தனக்கு விளக்கவும் மற்றவருக்கு விளக்கவும் சாக்கு போக்கையே காரணமாகக் கூறுகிறார்.

24. எனக்கு சர்க்கரை வியாதி, எனக்கு கால் இயலாது, எனக்கு படிப்பு போதாது, எனக்கு வயதாகிவிட்டது என்று நினைக்கும்போது நீங்கள் அதுவாகவே மாறிவிடுகிறீர்கள்.

25. தோல்விக்கு காரணமான சாக்கு போக்கிற்கு நீங்கள் காரணம் தேடாமல் அதை தகர்த்து வீழ்த்துவதே வெற்றியின் முதற் படியாகும்.

அலைகள் பழமொழிகள் 20.04.2019
இவை பழமொழிகள் என்ற தலைப்பில் நல்ல தன்னம்பிக்கை நூல்களில் படித்து, வடித்து எடுத்து தரப்படும் புதுமை செய்திகளாகும்.
தொடர்ந்தும் வரும்..
இது 20 வருடங்களாக தொடர்ந்து வருவதை மறந்துவிடாதீர்கள். காரணம் தளராத தன்னம்பிக்கை.

Related posts