தமிழகத்தில் அதிகரிக்கும் ஓட்டுக்கு பணம் வழங்கும் நடைமுறை

தமிழகத்தில் அதிகரித்துவரும் ஓட்டுக்கு பணம் வழங்கும் ‘கீழ்த்தரமான செயலுக்கு’ எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை கவனத்துடன் பரிசீலித்து நடவடிக்கை எடுங்கள் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் கடந்த மாதம் 29,30 தேதிகளில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களும், ரூ.10 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.

அதன்பின் இம்மாதம் 1 மற்றும் 2-ம் தேதி துரைமுருகனுக்கு நெருங்கிய உறவினரும் திமுக பகுதிசெயலாளருமான பூஞ்சோ சீனிவாசனின் சகோதரி வீட்டில் நடந்த வருமானவரிச் சோதனையில் ரூ.11 கோடியே 48லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்தது என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கே.கே. ரமேஷ் என்ற சமூக ஆர்வலர் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு பணம் வழங்கும் கீழ்த்தரமான முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வேலூர் திமுகவேட்பாளர் உறவினருக்கு சொந்தமான சிமெண்ட் குடோனில் ரூ.11 கோடியை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுவரை தமிழகத்தில் ரூ.78.12 கோடி பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளார்கள். தமிழகத்தில் மட்டும் ரூ.ஆயிரம் கோடிக்கும் அதிகமாக புழங்குவதாக தெரிகிறது. தமிழகம்,புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அதிகமாக செலவு செய்யும் தொகுதிகளாக பார்க்கப்படுகிறது. இந்த சம்பவங்கள் அனைத்தும் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதை உணர்ந்து தேர்தல் ஆணையமே அச்சமைடந்துள்ளது.

ஆதலால், பணத்தால் ஓட்டுகளை வாங்குவதின் தீங்கை ஊடங்களில் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின் ப றக்கும் படையை அதிகப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

ஒருவேளை மாநிலத்தில் தேர்தல் நேரத்தில் அளவுக்கு அதிகமான பணம் புழங்குவதால், தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டாலோ அல்லது தள்ளிபோடப்பட்டாலோ சில வேட்பாளர்கள் மக்களிடம் பணத்தை வாரிக்கொடுத்து வாக்குகளை வாங்க முயற்சிப்பர். மேலும் தேர்தல் நடந்த இதுவரை தேர்தல் ஆணையம் இதுவரை செலவு செய்த அனைத்து தொகையையும் வேட்பாளர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.

மேலும், விளம்பரப் பலகை அமைத்தும், மக்களுக்கு போக்குவரத்தில் இடையூறு விளைவிக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்குகளை பணம் கொடுத்து வாங்குவதால், சில வாக்காளர்களின், வேட்பாளர்களின் உரிமை மறுக்கப்படுகிறது. வேட்பாளருக்கு ஆதரவாக பணம் பெற்றுக்கொண்டு வாக்களித்தல் செயல் என்பது ஒரு தனிமனிதரின் சுயமரியாதையை ஏலம்போட்டு விற்பனை செய்வதற்கு ஒப்பாகும். வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பணத்துக்காக விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞருக்கும் வழங்க மனுதாரருக்கு தலைமை நீதிபதி தெரிவித்தார். மேலும், மனுதாரரின் கோரிக்கையை மிகுந்த கவனத்துடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts