என்.டி.ஆர் படம் தோல்வி: இயக்குநர் ராம் கோபால் வர்மா கிண்டல்

மக்களிடையே ‘என்.டி.ஆர்’ படம் தோல்வியடைந்துள்ளதை இயக்குநர் ராம் கோபால் வர்மா கிண்டல் செய்துள்ளார்.

மறைந்த ஆந்திர முதல்வரும், பழம்பெரும் நடிகருமான என்.டி.ராமாராவின் பயோபிக் (உண்மைக்கதை) சமீபத்தில் ஆந்திரா, தெலங்கானா மட்டுமின்றி, உலகமெங்கும் வெளியானது. என்.டி.ஆர் வேடத்தில் நடித்த அவரது மகனும் பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா நடித்துள்ளார். க்ரிஷ் இயக்கியுள்ள இப்படத்தில் வித்யா பாலன், ராணா, சுமந்த், கல்யாண் ராம், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே சுமார் 1500 திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமே வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாக சோபிக்கவில்லை. தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் படக்குழுவினருக்குp பாராட்டு தெரிவித்தார்கள்.

என்.டி.ராமாராவைப் பற்றி வெறும் 31 நாட்களுக்கு மட்டுமே ஆந்திர முதல்வராக இருந்த நன்டென்ட்லா பாஸ்கர ராவ் இப்போது யூடியூப் சேனல்களில் என்.டி.ஆர்., குறித்து தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார். 1980களில் நடந்தது என்னவென்று அவர் அளித்துவரும் பேட்டிகள் என்.டி.ஆர்., குறித்த பல அறியப்படாத தகவல்களைத் தருகின்றன. இவை யூ டியூப் தளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தை தொடக்கம் முதலே கடுமையாக விமர்சித்து வருகிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. ‘லட்சுமி என்.டி.ஆர்’ என்ற பெயரில் அவரும் என்.டி.ஆர் படத்தை இயக்க ஆயுத்தமாகி வருகிறார். தற்போது ‘என்.டி.ஆர்’ படம் மக்களிடையே தோல்வியடைந்ததைக் கிண்டல் செய்துள்ளார் ராம் கோபால் வர்மா.

இது குறித்து “என்.டி.ஆர். படத்தின் வாயிலாக என்.டி.ஆரை பிரபலப்படுத்த முயற்சித்ததில் என்.பி.ஆர் பிரபலமாகிவிட்டார். யூடியூப் சேனல்களில் என்.பி.ஆர் அளிக்கும் பேட்டிக்கான பார்வைகள் படத்துக்கான டிக்கெட் விற்பனையை விஞ்சிவிட்டது. இதன்மூலம் ஒன்று விளங்குகிறது. மக்களும் அல்ல மகேசனும் அல்ல.. யாருமே எதையும் முன் கூட்டியே கணிக்க முடியாது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா.

Related posts