பெண்கள் இயக்க உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை

முன்னாள் இயக்க உறுப்பினர்களாகிய பெண்கள் பலரும் சமூக, பொருளாதார நிலைமைகளில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிய வண்ணம் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய பெண்களது நிலைமைகளை உணர்வுபூர்வமாக அறியும் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் அவசியமாகின்றன என்றுஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேற்று (27) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (27)இடம்பெற்ற சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர்வலய அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கில் 63345பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் கிழக்கில் 40000பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் பொருளாதார நிலையில் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர். வடக்கில் கடந்த ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும் மிகவும் அதிகரித்துள்ளன.

வட மாகாணத்தைப் பொறுத்தவரை யாழ் மாவட்டத்தில் 36ஆயிரத்து 334குடும்பங்கள், கிளிநொச்சி மாவட்டத்தில் 8ஆயிரத்து 435குடும்பங்கள், முல்லைத்தீவு மாவட்டத்தில் 5ஆயிரத்து 961குடும்பங்கள், வவுனியா மாவட்டத்தில் 6ஆயிரத்து 712குடும்பங்கள், மன்னார் மாவட்டத்தில் 5ஆயிரத்து 903குடும்பங்கள் என 63ஆயிரத்து 345குடும்பங்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களாக வாழ்கின்றன.

கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் சுமார் 40ஆயிரம் பெண் தலைமைக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்தப் பெண்களில் 13ஆயிரம் பேர் 23வயதுக்குக் குறைந்தவர்களாகவுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 23ஆயிரம் பெண் தலைமைக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இத்தகைய பெண் தலைமைகளைக் கொண்ட குடும்பங்களின் பொருளாதார நிலை மிகவும் பாதகமான நிலையில் இருக்கின்ற அதே சமயம் இவர்கள் எதிர்கொள்கின்ற சமூகப் பிரச்சினைகளும் பாரியவை என்றே குறிப்பிடல் வேண்டும்.

அதே நேரம் முன்னாள் இயக்க உறுப்பினர்களாகிய பெண்கள் பலரும் சமூக, பொருளாதார நிலைமைகளில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிய வண்ணம் வாழ்ந்து வருகின்றனர். இப்பெண்களது பிரச்சினைகள் சமூகத்தில் காணப்படுகின்ற பொதுவான பிரச்சினைகளில் இருந்து வேறுபட்டவையாக இருக்கின்றன. எனவே இத்தகைய பெண்களது நிலைமைகளை உணர்வுபூர்வமாக அறியும் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் அவசியமாகின்றன என்று அவர் கூறினார்.

Related posts