சாதியை காப்பாற்றவே திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல்..! பெண்கள் எதிர்ப்பு

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக தன் கட்சியின் தேர்தல் அறிக்கையை முதலாவதாக வெளியிட்டுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடி, தனியார் துறையில் இட ஒதுக்கீடு, மது – புகையிலை ஒழிப்பு, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல் உள்ளிட்ட அம்சங்களுக்காக வரவேற்கப்பட்ட இந்தத் தேர்தல் அறிக்கை, பெண்கள் குறித்த வாக்குறுதி ஒன்றுக்காக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

“சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இளம் வயதினரின் திருமணத்திற்கு பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம் என்கிற விதி நடைமுறையில் உள்ளது. மிக இளம் வயதில் நாடகக் காதலால் இளம் பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும், குடும்ப அமைப்பைக் காக்கும் வகையிலும், வளரிளம் பருவத்தினரின் எதிர்கால நலன் காக்கவும் 21 வயதுக்குக் கீழானவர்களின் திருமணத்திற்கு இருதரப்பு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம்” என்ற வாக்குறுதி தான் அது.

பாமகவின் அதே தேர்தல் அறிக்கையில் திருமணம் குறித்த இன்னொரு முக்கியமான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. “பெரியாரால் முன்மொழியப்பட்டு, தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் அங்கீகரிக்கப்பட்டு, வெற்றிகரமாக நடைமுறையில் உள்ள சுயமரியாதை திருமணத்திற்கு அகில இந்திய அளவிலும் சட்டப்படியாக அங்கீகாரத்தைப் பெற்றுத் தர பாமக நடவடிக்கை எடுக்கும்” என்கிறது பாமக

21 வயதுக்குட்பட்டவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்களின் ஒப்புதல் என்பதும், பெரியாரால் முன்மொழியப்பட்ட சுயமரியாதைத் திருமணம் என்பதும் ஒன்றுக்கொன்று முரணானது என, வழக்கறிஞர் நிலவுமொழி செந்தாமரை கூறுகிறார்.

திருமணத்திற்குப் பெற்றோர்களின் ஒப்புதல் கட்டாயம் வேண்டும் என்பதற்கு, பாமக சொல்லும் காரணங்கள் இரண்டு. ஒன்று, ‘நாடகக் காதலில்’ இருந்து இளம்பெண்களைக் காப்பது, மற்றொன்று குடும்ப அமைப்பைப் பாதுகாப்பது. இது இரண்டுமே சாதியம், ஆணாதிக்கம் ஆகியவற்றின் வெளிப்படையில் இருந்து வருவது என்கிறார் நிலவுமொழி.

பாமக ‘நாடகக் காதல்’ என்று சொல்வது, தலித் ஆண்கள் சாதி இந்துப் பெண்களை காதலிப்பதைத் தான் சொல்கிறது. தலித் ஆண்கள் கூலிங் கிளாஸ், ஜீன்ஸ் பேண்ட் அணிந்து பெண்களை மயக்குவதாக பாமக தொடர்ச்சியாக சொல்லி வருகிறது. ஆனால், அவர்களுக்கு தங்களைவிட உயர்ந்த சமூகமாகக் கருதப்படும் சமூக ஆண்களை பெண்கள் காதலிப்பதில் பிரச்சினையில்லை. தலித் ஆண் காதலிப்பது தான் இவர்களுக்குப் பிரச்சினை. அதை வைத்துத்தான் நாடகக் காதல் என்ற ஒன்றை சொல்லி வருகின்றனர்.

21 வயதுக்குக் கீழானவர்களின் திருமணத்திற்குப் பெற்றோர் ஒப்புதல் கட்டாயம் என்ற வாக்குறுதிக்கு சட்டத்தின் துணையை பாமக நாடியுள்ள நிலையில், பாமகவின் இந்த வாக்குறுதி அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது என்கிறார் வழக்கறிஞர் நிலவுமொழி.

சுயமரியாதைத் திருமணம் குறித்து பாமகவுக்கு என்னவென்றே தெரியவில்லை என, பெண்ணியச் செயற்பாட்டாளர் ஓவியா கூறுகிறார்.இந்த வாக்குறுதியே மிக ஆபத்தானது. இதனைப் பெண்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும். இது பெண்களின் சுயமரியாதைக்கு விடப்பட்டுள்ள மாபெரும் அவமானம். சுயமரியாதைத் திருமணத்தை தேசிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பது ரொம்ப சரியான விஷயம். ஆனால், அதைச் சொல்லும் அமைப்பு, திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் கட்டாயம் என சொல்கிறதென்றால் பெரிய முரண் உள்ளதையே காட்டுகிறது. இதை அறியாமை என எடுத்துக் கொள்வதா எனத் தெரியவில்லை.

பெண்களுக்கு குடும்ப அமைப்புக்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு இல்லை என ஐநா முதற்கொண்டு பெரும்பாலான சர்வதேச அமைப்புகள் கூறுகின்றன. குடும்ப அமைப்புக்கு உள்ளே பெண்களுக்கு உரிமைகள் இல்லை. சாதி மறுப்புத் திருமணத்துக்கான அச்சுறுத்தல் இது.

தங்களை சாதியக் கட்சியாக பாமக நிலைநிறுத்திக் கொள்வது தான் இதற்குக் காரணம். குடும்ப அமைப்பு இல்லாமல் சாதிய அமைப்பு இல்லை. அதனால், யார் சாதியைக் காப்பாற்ற நினைக்கிறார்களோ அவர்கள் குடும்பத்தைக் காப்பாற்ற விரும்புவர். பெரியாரின் சுயமரியாதைத் திருமணம் குறித்து பாமகவுக்கு என்னவென்றே தெரியவில்லை” என்கிறார் ஓவியா.

Related posts