ஜெனீவா அமர்வில் இலங்கை சார்பில் ஒரே குழு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு அமர்வில் இலங்கைத் தரப்பில் ஒரு குழுவை பிரதிநிதித்துவம் செய்வதற்கு ஜனாதிபதி இறுதித் தீர்மானம் மேற்கொண்டிருப்பதாக சுதந்திரக் கட்சி எம்.பி மஹிந்த சமரசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜெனீவாவில் இரண்டு குழுக்கள் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை முன்வைப்பதிலும் பார்க்க வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான ஒரு குழு பிரதிநிதித்துவம் செய்வதே சிறப்பானதாக அமையுமென ஜனாதிபதி நம்புவதாகவும் அவர் கூறினார்.

இக்குழுவில் இம்முறை நான் அங்கம் வகிக்க மறுத்துவிட்டேன். எனவே ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம மற்றும் வடமாகாண ஆளுநர்ஆகியோர் ஜெனீவா செல்வரென்றும் அவர் குறிப்பிட்டார்.

அதுதொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே இத்தீர்மானம் எட்டப்பட்டதாக சுட்டிக்காட்டிய சமரசிங்க எம்.பி, குழுத் தலைவராக செயற்படும் அமைச்சர் திலக் மாரப்பன எதிர்வரும் 21 ஆம் திகதி ஜெனீவாவில், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கருத்துக்கள் அடங்கிய கூட்டறிக்கையை இலங்கை சார்பில் முன்வைப்பாரென்றும் அவர் தெரிவித்தார்.

இது சர்வதேசத்தில் இலங்கை சம்பந்தப்பட்ட விடயமென்பதால் இங்கு ஜனாதிபதியை ஓரம்கட்டி விட்டு தனியொரு தரப்பால் மட்டும் எந்தவொரு தீர்மானத்தையும் அறிவிக்க முடியாது என்பதற்காகவே கூட்டறிக்கையை முன்வைக்கும் தீர்மானம் எட்டப்பட்டது. அமைச்சர் திலக்மாரப்பன எதிர்வரும் 21 ஆம் திகதி உரையாற்றுவதற்கு முன்னர் அந்த உரை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பிவைக்கப்படும். இரு தரப்பினரதும் முழுமையான அங்கீகாரத்தின் பின்னரே அவர் அந்த உரையை அவர் ஜெனீவாவில் ஆற்றுவதென்றும் ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் சமரசிங்க எம்.பி விளக்கமளித்தார்.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். இணைஅனுசரனை வழங்குவதற்காக 30/1 மற்றும் 34/1 ஆகிய பிரேரணைகளிலுள்ள அனைத்து விடயங்களையும் ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கைக்கு இல்லையென்றும் அவர் விளக்கமளித்தார்.

அத்துடன் ஜெனீவாவில் உரை நிகழ்த்துவதுடன் நிறுத்தி விடாமல் அதனை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென்ற யோசனையையும் சமரசிங்க எம்.பி நேற்று பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைப்பிலான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய எம்.எ சுமந்திரன் எம்.பி மற்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் ஜனாதிபதி தரப்பில் ஜெனீவா செல்லும் குழு தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் முகமாக சமரசிங்க எம்.பி உரையாற்றும்போதே மேற்படி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது-

ஜெனீவா அனுப்புவதற்காக ஆளும் தரப்பிலிருந்தோ அல்லது எதிர்க்கட்சியிலிருந்தோ எவரையும் தீர்மானிக்கும் அதிகரமும் உரிமையும் ஜனாதிபதிக்கு உண்டு.

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்துக்கு பின்னர் மனித உரிமைகள் பேரவையில் கிட்டதட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றிருந்த இலங்கை கடந்த நான்கு ஆண்டுகளாக அதனை தவறவிட்டுள்ளது. நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஜெனீவாவில் எடுத்துக்கூறாமையே அதற்கு பிரதான காரணமாகியுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பான பிரேரணையை பெரிய விடயமாக்க சில நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளன. அவை பிரித்தானியா, கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளாகும். கனடாவில் 05 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்களும் பிரித்தானியாவில் சுமார் 2.5 இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்களும் உள்ளனர். அவர்கள் தற்போது அந்நாட்டின் பிரஜைகள். அவர்களது வாக்குகள் தேவையென்பதாலேயே அந்நாட்டின் மத்திய அரசாங்கங்கள் ஜெனீவாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

நான் நேற்று முன்தினமே ஜெனீவாவிலிருந்து நாடு திரும்பினேன். ஜனாதிபதியிடம் அங்குள்ள நிலவரத்தை தெரிவித்தேன். இக்கூட்டத்தில் சரத் அமுனுகம எம்.பி, வட மாகாண ஆளுநர், அமைச்சர் திலக்மாரப்பன,சுசில் பிரேமஜெயந்த எம்.பி, செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இம்முறை 21 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு விரிவான அறிக்கையை முன்வைக்கவுள்ளது.

இதில் 2015 ஆம் ஆண்டுக்கான 30/1 பிரேரணை மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கான 34/1 பிரேரணையும் சேர்ந்து முன்வைக்கப்படவுள்ளது. இலங்கை இணை அனுசரணை வழங்குவதற்காகஅனைத்து பிரேரணைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கில்லை. அதிலுள்ளஅதிருப்தியான விடயங்கள் தொடர்பில் நாம் ஜெனீவாவில் எடுத்துரைப்போம்.

நான் ஜெனீவா சென்றது போதுமென ஜனாதிபதியிடம் கூறிவிட்டேன். நான் சுமார்10 வருடங்களாக ஜெனீவா சென்று வருகின்றேன். நாட்டை காப்பாற்ற நான் என்னால் ஆன ஆகக்கூடிய முயற்சிகளை முன்னெடுத்துள்ளேன். அச்சந்தர்ப்பத்தில் நான் உரையாற்றுவதற்கு முன்னர் தயாரிக்கும் ஒவ்வொரு உரையையும் ஜனாதிபதி செயலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைப்பேன்.ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அதனை திருத்திய பின்னரே அந்த உரையை நாட்டின் சார்பில் முன்வைப்பேன். அதுபோன்றதொரு முறை மீண்டும் பின்பற்றப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியினதும் தற்போதைய விருப்பமென்றும் அவர் தெரிவித்தார்.

Related posts