இலங்கை இனப்பிரச்சனை இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு !

ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் கொடுக்கும் வகையில் வரைவு ஒன்றைத் தயாரித்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. வரும் 20ம் திகதி ஜெனீவாவில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை வெளிவர இருக்கிறது. பிரிட்டன் தலைமையிலான குழுவினர் இதை வெளியிட இருக்கிறார்கள்.

வரும் 20ம் திகதி நடைபெறும் இலங்கை தொடர்பான கலந்துரையாடலானது இலங்கைக்கு மேலும் இரண்டாண்டு அவகாசத்தை வழங்கும் என்றும் தெரியவருகிறது. காரணம் இதற்கான வரைபை நேற்று உறுப்பு நாடுகளிடையே உலாவ விட்டுள்ளனர். அதில் இந்த தகவல் இருக்கிறது.

கடந்த 2015ம் ஆண்டு மனித உரிமைகள் கவுண்சிலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற இலங்கைக்கு மேலும் இரண்டு வருடங்கள் அவகாசம் வழங்கப்படுவாக அவ்வறிக்கை கூறுகிறது.

இதைத் தொடர்ந்து இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பாக 2021ம் ஆண்டு அடுத்த அறிக்கை வெளியாகும். அத்தருணம் 2015 ம் ஆண்டு தீர்மானம் சரியான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்ற விவாதம் நடைபெறும்.

மறுபுறம் இலங்கைக்கு இனியும் கால அவகாசம் வழங்கக் கூடாது என்று தமிழர் தரப்பு கேட்டது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தேர்தல் நடக்கப்போவதால் எல்லாம் தாமதமாகிறது. புதிதாக வந்தவர்கள் மறுபடியும் இப்போதுதான் வந்திருக்கிறோம் சிறிது கால அவகாசம் வேண்டுமென கேட்க அவர்களுக்கு வழங்க வாய்ப்பாக இது தயாராகியிருக்கிறதா என்பது சந்தேகம்.

மேலும் நேற்று கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவர் இலங்கையில் காணாமல் போனோர் செயலகம் அமைக்கப்பட்டது முன்னேற்றகரமான விடயம் என்று கூறினார். ஆனால் காரியாலயம் அமைத்து என்ன பயன் இப்போதும் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் படங்களுடன் மக்கள் தெருவில்தான் நிற்கிறார்கள் என்றார்.

இந்தப் பிள்ளைகள் எங்கே..?

எப்போது கலையும் மௌனம்..?

இதே காலத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒரு முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் பாகிஸ்தான் பாராளுமன்றில் பேசும்போது அநீதிகளுக்கு எதிராகவே புலிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினார்கள் என்று தெரிவித்துள்ளார்.

புலிகள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் காரணமாகவே தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினார்கள். மத ரீதியான காரணங்களை வைத்து அவர்கள் போர் புரியவில்லை.

அமெரிக்காவில் இடம் பெற்ற இரட்டைக்கோபுர தகர்ப்பான செப். 11 தாக்குதல்களுக்கு முன்னதாகவே புலிகள் வீரியமான தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளார்கள் என்றும் பேசியுள்ளார்.

இதனுடைய கருத்து என்னவென்றால்…

இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் தற்கொலை தாக்குதல்களை நடத்துவதாக இந்தியா அடிக்கடி கூறி வருகிறது. ஆனால் இந்துக்களான புலிகளும் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினார்கள். அவர்கள் இஸ்லாமியர் அல்ல.. மேலும் அவர்கள் மதத்தின் காரணமாக நடத்தவில்லை. தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காவே விரக்தியடைந்து தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினார்கள்.

ஆகவே தற்கொலைத் தாக்குதல்களுக்கு மதம் ஒரு காரணமல்ல என்றும் கூறினார்.

இவ்வாறு புலிகளை அவர் உதாரணம் காட்ட காரணம்.. காஸ்மீர் பகுதியில் விரக்தியடைந்தவர்களே சில வாரங்கள் முன் இந்திய படைகள் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தி 40 இந்திய இராணுவத்தினரை கொன்றனர் என்றே கூற வருகிறார்.

காரணம் இந்திய இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகளாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காஸ்மீர் பிரச்சனை 1947 முதல் தீராத பிரச்சனையாக இருக்கிறது. இதனால் அங்கும் விரக்தி நிலவுகிறது என்பது அவர் கருத்து.

மேலும் இன்னொரு செய்தியின்படி வன்னியில் கடைசிப்போர் நடந்தபோது போரை நிறுத்தாவிட்டால் போர்க்குற்றம் சுமத்துவோம் என்று அப்போதைய அமெரிக்கத்தூதுவர் றொபேட் ஓ பிளேக் முன்னாள் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லா கமவை எச்சரித்தாக மகிந்தவின் முன்னாள் ஊடக பேச்சாளர் மொகன் சமரநாயக்கா நேற்று கூறியிருக்கிறார்.

இவைகள் போர் தொடர்பாக வெளிவரும் செய்திகள்..

அடுத்த தகவலின்படி முன்னாள் கூட்டமைப்பு பா.உ நடராஜா ரவிராஜ்ஜை கொல்ல முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ஐந்து கோடி வழங்கியதாக முன்னாள் உளவுப்பிரிவு அதிகாரி லியனாராச்சிகே இது குறித்த விசாரணையில் கூறினார். இந்தத் தொகை கருணா தரப்பிற்கு முன்னரே வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடராஜா ரவிராஜ் கொலைக்கு முன்னைய அரசாங்கம் சூழ்ச்சி செய்தது. இதற்கான பணம் பாதுகாப்பு அமைச்சின் வசந்த என்பவரால் வழங்கப்பட்டது. மேலும் கொலையுடன் பிரதி போலீஸ் மா அதிபர் கீர்த்தி கஜநாயக்கா, அரச புலனாய்வுத்துறையின் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் டுல், மற்றும் கருணா தரப்பு இணைந்தே நடத்தியது.

கொலை நடந்தியமைக்கான பணம் கருணா தரப்பிற்கு கிடைத்தா என்று தான் கேட்டபோது கருணா தரப்பினர் கிடைத்துவிட்டதாக தமக்கு தெரிவி;த்ததாகவும் சாட்சியமளித்துள்ளார். இந்த வழக்கு தொடர்கிறது. தொடர்ந்து சம்பவத்தை நேரில் பார்த்த ஹென் ஜலோரோய் அடுத்து விசாரிக்கப்பட இருக்கிறார் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வளவு செய்திகள் வெளியாகியுள்ளன.

அலைகள் 02.03.2019

Related posts