முஸ்லிம் காங்கிரஸ் – ரணில் இடையே கலந்துரையாடல்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு அலரிமாளிகையில் சனிக்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவிக்கின்றது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதி அமைச்சர் அலி சாயிர் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபிக்கின்றமை தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடன், தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் கடந்த காலங்களில் குற்றம் சுமத்தியிருந்தன.

இந்த பின்னணியில், தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான யோசனை அடங்கிய பிரேரணை ஒன்றை சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் வெள்ளிக்கிழமை கையளித்திருந்தார்.

தேசிய அரசாங்கமொன்றின் ஊடாக அமைச்சரவை பொறுப்புகளை அதிகரித்துக் கொள்வதற்கான நோக்கில் இந்த பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய அரசாங்கத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அடங்கலாக 30 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

18 ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 7 பிரதியமைச்சர்களும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.

இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கின்ற சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இதுவரை அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாமை குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே, தேசிய அரசாங்க கருப் பொருள் உருவாகியுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன இணைந்து தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தன.

113 என்ற பெரும்பான்மையை உறுப்படுத்திக் கொள்ளும் நோக்குடன், இந்த தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ கூறியிருந்தார்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கம் வகிக்கின்றமையினால், தேசிய அரசாங்க கருப் பொருளுக்கு செல்ல முடியாது என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த பின்னணியிலேயே, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts