பிள்ளைகள் கெட்டுப்போக பெற்றோரும் காரணம்

பிள்ளைகள் கெட்டுப்போவதற்கும், அதீத உரிமை எடுத்துக்கொள்வதற்கும் பணமும், புகழும் மட்டும் காரணம் அல்ல, பெற்றோரும் சம அளவு காரணம்தான் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் தெரிவித்தார்.

கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, இருவரும் பெண்கள் குறித்து சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அந்தத் தடை நீக்கப்பட்டு அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். அதைத் தொடர்புபடுத்தி ராகுல் திராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் திராவிட் கிரிக் இன்போ தளத்துக்கு பேட்டி அளித்தார். அதில் ஹர்திக் பாண்டியா, ராகுல் ஒழுக்கக்கேடான பேச்சுக்கு இளம் வயதிலேயே பணம், புகழ் காரணமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ராகுல் திராவிட் பதில் அளித்ததாவது:

”நான் இந்த விஷயத்தில் வீரர்கள் பேசியதற்கு இளம் வயதிலேயே கோடிக்கணக்கில் பணம், புகழ் கிடைத்ததால் அவ்வாறு பேசியதற்கு முழுமையான காரணம் இல்லை. அதையும் தாண்டி பெற்றோர்களின் வளர்ப்பும், கவனிப்பும் சம அளவு காரணம். இந்த மாதிரி குணங்கள் எல்லாம் இளம் வயதிலேயே வரக்கூடியது. பணக்காரர்கள் வீட்டில்தான் இவ்வாறு நடக்கும் என்பதற்கில்லை. பணக்காரர் அல்லது ஏழை எந்த வீட்டிலும், ஒரு ஆண் அல்லது பெண் பிள்ளைக்கு அதிகமான கவனம் கொடுக்கப்படும் போது, அன்புகாட்டி, அதிக உரிமை அளிக்கப்படும்போது அவர்களும் அதிக உரிமை எடுத்துக்கொள்வார்கள்.

ஒரு நபருக்காக அனைத்தையும் தியாகம் செய்தால், அது அதிகமான உரிமை எடுத்துக்கொள்வதற்கு வழிவகுக்கும். இளம்வயதில் அதிகமான செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்ட குழந்தைகள் இதை உணர்ந்திருப்பார்கள். ஒரு வீரருக்கு அதிகமான உரிமை அளிக்கப்பட்டாலும் இதுபோல பிரச்சினைதான் வரும்.

சில சமயம் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியது இருக்கும். தேசிய விளையாட்டு அகாடமியில் ஏராளமான பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னிடம் அடிக்கடி சொல்வதெல்லாம், சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பந்துவீச்சாளர்கள் எல்லாமல் மோசமான பீல்டர்களாக இருக்கிறார்கள், அல்லது விக்கெட்டுகளுக்கு இடையே சரியாக ஓட முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

ஒரு வீரரை சரியாக உருவாக்குவதில் பயிற்சியாளருக்கு இருக்கும் அதே பங்களிப்பு பெற்றோருக்கும் உண்டு. இளம் வயதில் அவரைக் கட்டமைப்பது பெற்றோர்தான். குழந்தைகள் செய்த தவறையும், ஏமாற்றுத்தனத்தையும் ஏற்றுக்கொள்ளத் தொடங்கினால், அங்குதான் பிரச்சினை உருவாகும். தவறையும், ஏமாற்றுத்தனத்தையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும், சரியானது அல்ல என உணர்த்த வேண்டும்.

அதேபோல அணியில் உள்ள மூத்த வீரர்களும் வளரும் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக, ஆதர்ஷ வீரர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கு நல்ல விஷயங்களையும் கற்றுத்தருபவராக, சிறந்த உதாரணமாகத் திகழ வேண்டும். தவறு நடப்பது இயல்புதான் ஆனால் அந்த தவற்றில் இருந்து பாடம் கற்று மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும்.

பாண்டியாவும், ராகுலும் இளம் வீரர்களுக்கு நல்ல மாதிரியாக உருவாக வேண்டுமானால், தாங்கள் சந்தித்த கடினமான நேரங்களை பாடமாக எடுத்துக்கொண்டு திருந்த வேண்டும்”.

இவ்வாறு ராகுல் திராவிட் தெரிவித்தார்.

Related posts