பரடைசியயா நகரில் பட்டை கிளப்பியது மகாராணி நாடகம்

டென்மார்க் பரடைசியா நகரில் உள்ள நாடக அரங்கில் இன்று 26.01.2019 சனிக்கிழமை மாலை 17.00 மணிக்கு மேடையேறியது மகாராணி என்ற சரித்திர நாடகம்.

தமிழ் ஆசிரியையும் சிறந்த கலைஞருமான திருமதி சிவகலை தில்லைநாதன் அவர்களால் இயக்கப்பட்ட இந்த நாடகத்தில் சுமார் 40 வரையான கலைஞர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

தமிழகத்தின் பிரபல நடிகர் நாஸர் தலைமையில் இங்கிலாந்தில் இடம் பெற்ற உலக நாடக விழாவில் மேடையேறிய இந்த நாடகம் இப்போது மேலும் திருத்தப்பட்டு ஒரு முழு நேர நாடகமாகவே தயாரிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் இருந்து ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய வேலு நாச்சியாரின் கதையை அழகுபட கவிதைபோல அரங்கில் வர்ணங்களாலும், தீந்தமிழாலும் தீட்டினார்கள்.

இன்றைய புதிய தலைமுறையினரை நாடகத்திற்கு கொண்டு வந்து, அதில் நாட்டத்தை ஏற்படுத்தியதே ஆசிரியையின் முதல் பெரு வெற்றியாகும்.

பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம், அல்லாவிட்டால் கரோக்கியில் பாடுவது, இல்லை பாடல்களுக்குள் ஆடுவது என்ற வட்டத்திற்குள் ஓடிய பிள்ளைகளை ஒரு மாறுதலாக நாடக உலகிற்குள் கொண்டுவந்தது ஒரு கலைத்துவ மாற்றம் என்றே கூற வேண்டும் என்றார்கள் பலர்.

பழகிய பரதமும் பாடிய சங்கீதமும் நாடகத்திற்குள் பிள்ளைகள் வரும்போதுதான் முழுமை பெறுகிறது என்று பலரும் பேசியதை இடைவேளையின் போது காதால் கேட்க முடிந்தது. நாடகம் மட்டுமல்ல பிள்ளைகள் தங்கள் திறமையால் பல நடன வடிவங்களை உருவாக்கியிருந்தனர். அதனால் வழமையான நாடகங்களில் இருந்து ஒரு மென்மையான மாற்றம் தெரிந்தது.

பொதுவாக கலை விழாக்களுக்கு கட்டணம் விதித்தால் மக்கள் வரமாட்டார்கள் என்று ஓர் அச்சம் நிலவுகிறது, இதனால் இலவசமாகவே நிகழ்வுகள் நடந்து வந்தன. அந்தவகையில் நாடகம் ஒன்றிற்கு அதுவும் தமிழ் ரசிகர்கள் நுழைவு சீட்டு எடுத்து அரங்கை நிறைத்திருந்தமை புதுமை என்றே கூற வேண்டும்.

மக்களில் ஒரு மாற்றம் தெரிகிறது..

ஒரே அரங்கில் பல மாதங்களாக டேனிஸ் கலைஞர்கள் பயிற்சி எடுத்தும் கோட்டைவிட்டுவிடுவதை பல சந்தர்ப்பங்களில் பார்த்துள்ளோம். ஆனால் இன்று மதியம்தான் அரங்கு வழங்கப்பட்டாலும், ஒலி, ஒளி போன்றவற்றில் குறைகள் வராமல் கச்சிதமாக காரியத்தை முடித்தார்கள்.

இளம் பிள்ளைகளின் நடிப்பு சிறப்பாக வேலு நாச்சியார், குயிலி போன்றவர்கள் முக்கிய பாத்திரங்களுக்கு ஜீவன் கொடுத்தார்கள். மற்ற அனைவருமே சோடை போகாது இணை நடிப்பை வழங்கி அரங்கில் பாராட்டு பெற்றார்கள்.

வேலு நாச்சியார் என்று கதை கூறப்பட்டாலும் குயிலியின் தற்கொலைத் தாக்குதலில் இருந்து ஓர் ஈழப்போராட்டத்தையே நாடகம் காட்டியது. ஆனால் அதில் ஒரு மாற்றம் : போர் இறுதியில் தமிழருக்கு வெற்றி தருவதாக நிறைவு செய்தது ஆறுதல் தந்தது. இனிமேல் வீரபாண்டிய கட்டப்பொம்மு போல தூக்கில் தொங்கும் கதைகள் வேண்டாம் என்று மனது கூறியது, அதுபோலவே முடிவும் தமிழருக்கு வெற்றியாக இருந்தது.

வேலு நாச்சியார், மருது பாண்டியர், சிவகெங்கைச் சீமை போன்ற விடயங்கள் புத்துயிர் கொடுக்கப்பட்டிருந்தன.

முக்கியமான காட்சிகளில் எல்லாம் முடிவடைய மக்கள் வானதிர கரகோஷம் எழுப்பினார்கள்.

நாடகத்தில் இசை மிகவும் சிறப்பாக அமைந்ததாக பிரான்ஸ்சில் இருந்து வருகை தந்த நாடக ஆசிரியர் திரு அரியநாயகம் பாராட்டினார்.

நாடு போகும் போக்கில் இனி நாடகத்தின் கதை முடிந்துவிட்டதென நினைத்த பல நாடகக் கலைஞர்கள், நாடகங்கள் ஜீவனுடன் இருப்பதை கண்டு கொண்டு தாமும் புதிய நாடகம் போட இருப்பதாக தெம்புடன் கூறினார்கள்.

கிறீன்ஸ்ரட் நகரில் வாழும் கலைஞர் டக்ளஸ் சங்கிலியன் நாடகத்தை போட ஆசைப்படுவதாக சொன்னது ஓர் உதாரணம்.

நாடகத்தில் அடுத்த சிறப்பம்சம் ஆடை அணிகலன், ஒப்பனை ஆகும் திருமதி ராஜலிங்கம் மிகவும் சிறப்பாக அலங்கரித்திருந்தார். நடிகவிநோதன் ரீ. யோகராஜா ஆண் கலைஞர்களுக்கு ஒப்பனை செய்தார்.

விழாவில் பரிசளித்த ஆசிரியர் கி.செ.துரை தொய்வு விழுந்த டென்மார்க் நாடகக் கலை மறுபடியும் புதுவலு பெற ஆரம்பித்துவிட்டது என்று பாராட்டினார். ஆசிரியை சிவகலை தில்லைநாதனே உண்மையில் வேலு நாச்சியார் என்று கூறியதோடு, இப்படியொரு நாட்டில் இத்தனை கலைஞர்களை வேலு நாச்சியார் வந்தாலும் இணைத்து நாடகம் போடுவது கடுமை என்றார்.

பிரான்சில் இருந்து வருகை தந்த நாடக முனைவர் திரு. அரியநாயகம் நாடகம் பற்றி சிறப்புரையாற்றினார். சுவிற்சலாந்தில் இருந்து பிரபல கலைஞர் கங்கைமகன் உரையாற்றும்போது ஆசிரியையின் திறமைகளை பேசினார். கவிஞர் சோதி செல்லத்துரை பரிசில்களை வழங்கி பாராட்டினார்.

வேலு நாச்சியாராக நடித்த ம. சாம்பவி அவர்கள் நன்றியுரை கூறினார். மிகுந்த கஷ்டப்பட்டு பயிற்சி எடுத்து அரங்கப்படுத்திய இந்த முயற்சியை அவையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று பாராட்டினார்கள்.

அனைத்து கலைஞர்களுக்கும் வெற்றிக்கிண்ணம் வழங்கப்பட்டது. பரடைசியா நாடக அரங்க ஊழியர்கள் ஒளி, ஒளியை சிறப்போடு வழங்க, தவச்செல்வன் செல்லக்கதிரமலை படைப்பை ஒளி ஆவணப்படுத்தினார்.

காலத்தால் அழியாத காவிய முயற்சி, பங்கேற்ற அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

நாடகம் முடிந்தபோது வீடுபோகும் ரசிகர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி அனுப்பியது நல்ல விடயமாகும். தூர இடங்களில் இருந்து வந்தோர்க்கு சுகர் ஏறாமல் இருக்க உதவியது.

இதுதான் தாயமென வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் பெட்டிகளை எடுத்து சென்று பிந்தி வந்தவர்களை பட்டினி போட்ட தமிழ்ச்சனத்தில் சிறிய மாற்றமும் வரவேண்டும் என்று சாப்பாடு கிடைக்காத ஒருவர் கூறியபடியே அருகில் இருந்த மக்டொனால்சிற்குள் பாய்ந்தார்.

எப்போதும் வந்திருக்கும் மக்களுக்கு எற்பவே உணவுப் பொதிகள் இருக்கும் என்பதை உணர்ந்து தமிழ் மக்கள் நடக்க வேண்டியது அவசியம்.

இரண்டு பெட்டிகளை வீ;டு கொண்டு போக வைத்திருந்த ஒருவரிடம் ஒரு பெட்டியை பறித்துக் கொண்டு காரில் ஏறும் போது நேரம் 20.30 காட்டியது.

அலைகள் 26.01.2019 சனி இரவு

Related posts