இந்தியன் 2’ படத்தில் சிம்புவுக்குப் பதிலாக சித்தார்த்

இந்தியன் 2’ படத்தில் சிம்புவுக்குப் பதிலாக சித்தார்த் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்தார். இப்படம்தான் கமல் – ஷங்கர் இணைந்து பணியாற்றிய கடைசிப் படம்.

தற்போது 22 வருடங்கள் கழித்து ‘இந்தியன் 2’ உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 18-ம் தேதி தொடங்கியது. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்துக்காக, தனது அரசியல் பணிகளுக்கு இடையே உடலமைப்பை மாற்றியமைத்துள்ளார் கமல். பொள்ளாச்சி, சென்னை, ஹைதராபாத் மற்றும் பல வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து ‘இந்தியன் 2’வுக்கான வசனங்களை எழுதியுள்ளனர்.

இந்தப் படத்தில், கமல்ஹாசனின் மகனாக நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், சிறிய வேடம் என்பதால் சிம்பு தயங்க, ‘பாய்ஸ்’ படத்தில் ஹீரோவாக நடித்த சித்தார்த்தை அணுகினார் ஷங்கர். குருவே தன்னிடம் கேட்டதும், உடனே ஓகே சொல்லிவிட்டார் சித்தார்த் என்கிறார்கள்.

Related posts