அரசியலமைப்பை நிறைவேற்ற பொதுத் தேர்தல் அவசியம் இல்லை

சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் தீர்மானிப்பர்

அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்காக பொதுத் தேர்தலொன்றுக்குச் செல்லவேண்டிய அவசியம் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் அரசியலமைப்பு, சர்வஜன வாக்கெடுப்பின் போது மக்களால் அனுமதிக்கப்பட வேண்டும். அரசியலமைப்பை ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்பதால் இந்த நோக்கத்துக்காக பொதுத் தேர்தலொன்றுக்குச் செல்லவேண்டிய அவசியம் இல்லையென்றும் அவர் கூறினார். அத்துடன், புதிதாக தயாரிக்கப்படும் அரசியலமைப்பானது பாராளுமன்றத்தில் உள்ள சகல கட்சிகளின் ஒப்புதல் மாத்திரமன்றி சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ள அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகள் கைவிடப்படுமாயின் அது நாடு எதிர்நோக்கக் கூடாத மோசமானதொரு யுகத்தின் ஆரம்பமாக அமைந்துவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

நேற்றையதினம் நடைபெற்ற அரசியலமைப்பு சபையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இரா.சம்பந்தன் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

1984ஆம் ஆண்டிலிருந்து புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதியாக இருந்தபோது மஹிந்த ராஜபக்ஷவும் அதிகாரங்களைப் பகிர்வதற்கு இணங்கியிருந்தார். அவ்வாறு செயற்பட்ட அவர் தற்பொழுது தேர்தல்கள் பற்றிக் கதைக்கின்றார். சிறுசிறு காரணங்களை முன்வைத்தும், உள்ளூராட்சி தேர்தல் முடிவை வைத்துக் கொண்டும் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறுகின்றார். குறிப்பாக அரசியலமைப்பை சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக மக்கள் ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பார்கள். எனவே இந்த நோக்கத்துக்காக பொதுத் தேர்தலொன்றுக்குச் செல்ல வேண்டிய தேவை இல்லை.

அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாட்டுக்கு சகல கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றேன். தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த செயற்பாடு இடைநிறுத்தப்படுமாயின் நாடு எதிர்கொள்ளக் கூடாத மோசமானதொரு தசாப்தத்துக்கான ஆரம்பமாக அமைந்துவிடும் என்றும் குறிப்பிட்டார்.

1947, 1972ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கள் மிகவும் குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டவை. குறிப்பிட்ட காலப்பகுதியில் அந்த அந்தக் கட்சிகளுக்கு பெரும்பான்மை இருந்தமையால் அதனை கொண்டுவரப்பட்டன. ஆனால், இன்று அனைத்து கட்சிகளும் கலந்துரையாடப்பட்டு பெறப்பட்ட கருத்துகளின் பிரகாரம் தான் இந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியும். இந்த முயற்சிகளுக்கு ஒவ்வொரு உறுப்பினர் ஆதரவளிக்க வேண்டும். 1987ஆம் ஆண்டு 13ஆவது திருத்தச்சட்டத்தில்தான் முதல் முதலில் அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பான விடயம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதிகளான பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் காலத்தில் அரசியலமைப்பை புதிதாக தயாரிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இவை வெற்றியளித்திருக்காத போதும் தற்பொழுது மீண்டும் அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் இடம்பெறுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் அரசியலமைப்பானது சகல தரப்பினரினதும் ஒப்புதலைப் பெற்றதுடன், மக்களின் ஒப்புதலைப் பெற்றதாகவும் இருக்க வேண்டும் என்றார்.

Related posts