கூட்டமைப்பினர் சிங்கள அரசியல்வாதிகளுடன் கைகோர்த்துச் செல்லும் நிலை

நீண்டகாலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சிங்கள அரசியல்வாதிகளுடன் கைகோர்த்துச் செல்லும் நிலைமை காணப்பட வில்லை.தற்போது அச்சந்தர்ப்பம் அவர்களுக்கு கிட்டியுள்ளது.இது ஜனநாயத்திற்கு கிடைத்துள்ள ஒரு நல்ல விளைவாகும் என்று அரச நிறுவனங்கள்,மலைநாட்டு உரிமைகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

புதிய அமைச்சரவையில் பதவியேற்றபின் கண்டிக்கு விஜயம் செய்த அவர் ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று மதவழிபாடுகளில் ஈடுப்பட்டதன் பின் மல்வத்தை மகாநாயக்கத் தேரர் வண வாரியப்பொல ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள,அஸ்கிரிய பீட மகாநாயகத் தேரர் வண வரகாகொட ஞானரத்ன ஆகியோரை சந்தித்து நல்லாசி பெற்றபின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

எதிர்பாக்க முடியாத அளவுக்கு மக்கள் வியப்படையும் நிவாரங்களுடனனான வரவு செலவுத்திட்டமொன்று அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்படும். அதற்கான நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் வறுமை நிவாரணம், ஓய்வூதிய அதிகரிப்பு,அத்தியாவசிப் பொருட்களது விலைகுறைப்பு,சமுர்தி கொடுப்பணவு அதிகரிப்பு உற்பட இன்னும் பல நிவாரணங்களை வழங்க உள்ளோம்.

தமக்கு பாராளுமன்றில் பெரும்பான்மை உண்டு என முழங்கும் கூட்டு எதிரணியினருக்கு உண்மையாக எத்தனை அங்கத்தவர்கள் உள்ளனர் என்பதை அடுத்த வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் அறிந்து கொள்ள முடியும்.

அதேபோல் மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சபாநாயகர் முன்னிலையில் எடுத்த வாக்கெடுப்பின் போது கூட்டு எதிரணியினரின் பலவீனம் எத்தனையது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

அவர்களுக்கு 86 பேரே ஆதரவு தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு பெரும்பான்மை கிடையாது என்பதையும் தெளிவு படுத்திக் கொள்ள முடிந்தது.

எம்முடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உருப்பினர்கள் பலர் இன்னும் இணைந்து கொள்ள உள்ளனர்.

அவர்கள் அமைச்சுப் பதவிகளை எதிர்பாத்து எம்முடன் இணையவில்லை. அவர்களுக்கு நல்லதொரு அரசியல் எதிர்காலம் ஒன்று கிடைக்க வேண்டும் என்பதற்காகவே எம்முடன் கையோர்த்து வருகின்றனர்.

நாட்டின் அரசியல் அமைப்பிற்கு ஏற்ப இயங்குகின்ற,அரசியல் அமைப்பிற்கு கௌரவம் வழங்கும் சம்பிரதாயம் ஒன்று எதிர் காலத்தில் உருவாகும். அரசியல் அமைப்பை காலால் உதைத்து அதனை மிதித்து அவமரியாதை செய்து ஆட்சி புரியும் யுகம் இனி ஏற்படாது.

மக்கள் அரசியல் அமைப்பு தொடர்பாக நல்ல தெளிவுடன் உள்ளனர். கட்சிவிட்டு கட்சி தாவும் உறுப்பினர் ஒருவரின் பதவி காலியாவதாக அரசியல் அமைப்பில் உள்ளது.

இது பற்றி நான் முன்பு ஒரு முறை குறிப்பிட்டிருந்தேன். 50 உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவுடன் இணைந்தனர். பாராளுமன்ற அமர்வு தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பு இவ்வாறு அமைந்திருக்கும் என அவர்கள் எதிர்பார்க்க வில்லை. இதனால் அவர்கள் தாமரை மொட்டுடன் இணைந்துவிட்டனர்.

அவர்கள் தாமரை மொட்டினுள் சிறைபட்டுள்ளனர். நீதி மன்றத் தீர்பின் படி இனி உரிய காலம் வரும்வரை அல்லது பாராளுமன்றத்தில் போதிய ஆதரைப் பெறாமல் தேர்தலுக்கு செல்ல முடியாது.

அப்படி ஒரு தேர்தல் நடத்தினாலும் அது செல்லுபடியற்றதாகும்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு நாம் தயாராகிவிட்டோம். அண்மையில் நடந்த பிரச்சினை காரணமாக ஐ.தே.க. ல் இளம் தலைமைகள் பல புதிததாக உருவாக்கம் பெற காரணமாகியது. எனவே அடுத்த தேர்தலில் நாம் ஐக்கிய தேசிய கட்சியாகவே போட்டியிட உள்ளோம்.

பொது அபேட்சகர் அன்றி எம்மில் பொருத்தமான ஒருவரை போட்டியிட தயார் படுத்துவோம்.

19வது அரசியல் திருத்தத்தின் ஊடாக பல்வேறு விடயங்கள் மாற்றப்பட்டுள்ளன. பொலிஸ் சேவை ஆணைக்குழு,அரச சேவை ஆணைக்குழு, நீதிச் சேவை ஆணைக்குழு போன்றன தற்போது சுதந்திரமாக இயங்குகின்றன. எனவே நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு அவற்றை கட்டுப்படுத்தும் நிலைமை எதிர் காலத்தில் இல்லாது போகும். நீதித்துறை, நிர்வாகத் துறை,நிறைவேற்று அதிகாரம் ஆகியனவற்றின் செயற்பாடுகளில் சமநிலைத் தன்மை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஜனநாயகப் பண்புகளை சரிவர மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.நீண்டகாலமாக தமிழ் தேசிய கூட்டணியினர் சிங்கள அரசியல் வாதிகளுடன் கைகோர்த்துச்செல்லும் நிலைமை காணப்பட வில்லை. தற்போது அச்சந்தர்ரப்பம் கிடைத்துள்ளது.

இது ஜனநாயத்திற்குக் கிடைத்த ஒரு நல்ல பெறுபேறாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts