இளையராஜா சம்பாத்தியத்தை கணக்கு காட்ட வேண்டும்

சம்பளம் பெற்று இசையமைத்த பாடல்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா உரிமை கோருவது சட்டவிரோதம் என திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆறு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார், அன்புச்செல்வன், ஜெபஜோன்ஸ், மீரா கதிரவன், மணிகண்டன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

அவர்களது மனுவில் கூறியிருப்பதாவது:

“திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஏதேனும் திரைப்படத்தை எடுக்க முயற்சிக்கும் போது இயக்குநரைத் தீர்மானிக்கின்றனர். இயக்குநரின் அறிவுரைப்படி நடிகர் நடிகைகள், இசையமைப்பாளர் மற்றும் பிற தொழில்நுட்ப வல்லுநர்கள் முடிவு செய்யப்படுகின்றனர். கடந்த 80 ஆண்டுகளாக இந்த நடைமுறை தான் சினிமா துறையில் நடந்து வருகின்றது

ஊதியம் பெற்றுக்கொண்டு பணியாற்றும் இசைமைப்பாளர்கள் தங்கள் பணிக்கு எந்த உரிமையும் கோர முடியாது. படத்தில் அவர்களின் பங்களிப்புக்கு முதல் உரிமையாளர் தயாரிப்பாளர் தான். இந்த உரிமையை இந்திய காப்புரிமைச் சட்டம் வழங்கியுள்ளது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இசையமைப்பாளர் இளையராஜா, தான் இசையமைத்த படங்களில் இடம்பெற்ற பாடல்களின் காப்புரிமை தனக்கே சொந்தம் எனக் கூறி வருகிறார்.

இளையராஜாவை இசையமைப்பாளராக நியமித்து படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் காப்புரிமையை அவருக்கு வழங்கி, எந்த ஒப்பந்தமும் போடப்படாத நிலையில் அவர் இசையமைத்த பாடல்கள் மீது உரிமை கோருவது சட்டவிரோதமானது.

இதை அனுமதித்தால் படத்தின் கதாநாயகன், நகைச்சுவை நடிகர், இயக்குநர் ஆகியோரும் காப்புரிமை கோரக் கூடும். பெரும் தொகையை முதலீடு செய்து படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு இறுதியில் எதுவும் கிடைக்காத நிலை உருவாகும்.

எனவே, திரைப்படத்தை தயாரிப்பாளர்களுக்குத்தான் படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சி, பாடல், என அனைத்திற்கும் முழு உரிமை உள்ளது என அறிவிக்க வேண்டும். தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்குத் தடை விதிக்க வேண்டும் தங்களது படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மூலம் இளையராஜா சம்பாதித்த பணம் குறித்த கணக்குகளைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்” என கோரப்பட்டுள்ளது.

இன்னும் இந்த மனுவிற்கு வழக்கு எண் இடப்படாத காரணத்தால், கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகே இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts