ஜெமினி எஸ்.எஸ். வாசனின் சந்திரலேகாவின் பின் ரஜினியின் 2.0

சென்ற நூற்றாண்டில் ஜெமினி எஸ்.எஸ். வாசன் நிகழ்த்திய சந்திரலேகா திரைப்படத்தின் சாதனையை முறியடிக்குமா இயக்குநர் ஷங்கரின் எந்திரன் 2.0. திரைப்படம். இன்று வெளியாகும் எந்திரன் 2.0ம் அன்று வெளியான சந்திரலேகாவும் ஓர் ஒப்பீட்டு பார்வை.

இந்திய திரைப்பட வரலாற்றில் இன்றுவரை சாதனைத் திரைப்படமாகவும் பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகவும் போற்றப்படுவது ஜெமினி எஸ்.எஸ். வாசன் தயாரிப்பிலும் இயக்கத்திலும் வெளி வந்த சந்திரலேகா திரைப்படம்தான்.

வசூலை அள்ளிக் கொட்டியது. கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக புதிய புதிய பிரிண்ட் போட்டு திரையிட திரையிட, தலை முறை தலை முறையாக திருப்பித் திருப்பி பார்க்கப்பட்டு சரித்திரம் படைத்த திரைப்படம் சந்திரலேகா.

எம்.கே.ராதா, ரி.ஆர்.ராஜகுமாரி, ரஞ்சன் நடிப்பில் வெளியானது.

1948 ஏப்ரல் 9ம் திகதி ரிலீசான இந்தத் திரைப்படம் அக்காலத்தே தமிழகத்தில் மட்டும் 40 திரையரங்குகளில் காண்பிக்கப்பட்டது. இந்தி, ஜப்பான் உட்பட டேனிஸ் மொழிவரை இந்தப்படம் பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்து வெளியானது.

இதனுடைய வசூல் மிகவும் பிரமாண்டமானதாக இருந்தது. பணப்பெறுமதி குறைந்த அக்காலத்திலேயே கோடிகளை அசால்டாக புரட்டிப் போட்டதைப் பார்த்து இந்திய திரைப்பட வரலாறு இதை இன்று வரை சாதனை வரலாறாகவே பதிந்து பெருமைப்படுகிறது.

இப்படத்தின் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தவர் ஜெமினி எஸ்.எஸ். வாசனே இவரால் உருவாக்கப்பட்டதே ஆனந்தவிகடனாகும். எம்.ஜி.ஆரின் 100 வது படமான ஒளிவிளக்கையும் இவர்கள் நிறுவனமே தயாரித்தது.

இவருடைய திரைப்படங்கள் தொடங்க முன்னர் இரண்டு சிறுவர்கள் குழல் ஊதுவது போல ஆரம்பம் வரும். ஜெமினி பிக்சர்ஸ் திரைப்படம் என்றால் அது வார்ணர் பிரதேர்ஸ் போல பிரமாண்டம்தான் என்ற வியாபார சின்னத்தையும் உருவாக்கினார்.

அன்றைய ரூபா மதிப்பில் பார்த்தால் சந்திரலேகா தயாரிப்பு தொகை இந்திய திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்றுவரை அதன் வசூல் சாதனையை உடைத்த படங்கள் வந்ததாகக் கூறமுடியிவ்லை.

ஆனால் சந்திரலேகாவிற்கு பின்னர் அதே பிரமாண்டத்துடன் ஷங்கரின் இயக்கத்தில் ஈழத்தமிழரான லைக்கா நிறுவன உரிமையாளர் அல்லிராஜா சிவாஸ்கரனால் தயாரிக்கப்பட்டுள்ள எந்திரன் 2.0 திரைப்படம் அதற்குப் பின் இந்திய திரையுலக வரலாற்றில் ஒரு பிரமாண்டமான தயாரிப்பாக இன்று வெளிவருகிறது.

இதுவும் சந்திரலேகா போல உலகம் முழுவதும் வெளிவருகிறது. சுமார் 10.000 திரையரங்குகளில் இந்தி, தமிழ் மொழிகளில் காண்பிக்கப்பட இருக்கிறது.

இந்தத் திரைப்படம் இன்றைய செலவில் 543 கோடி இந்திய ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் கோடிகளை எட்டித் தொடும் என்பது இதனுடைய வர்த்தக இலக்காக இருக்கிறது. இந்திய திரைப்பட வரலாற்றில் அதிக செலவில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் என்றாலும் அதையும் ஒரு புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் தயாரித்திருப்பது இரட்டிப்பு சிறப்பம்சமாகும்.

படம் சிறந்த படமா இல்லையா என்ற ரசிகர்கள் கருத்துக்கள் வெளி வரமுன்னதாகவே படம் விட்ட பணத்தை உழைத்துவிடும் என்று கணக்குகள் கூறப்படுகிறது.

தமிழ் திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய கிராபிக்ஸ் காட்சிகளைக் கொண்ட, ஹொலிவூட் நிபுணர்கள் பலர் பணியாற்றிய 3 டி திரைப்படமாக வெளியாகிறது. இதுவரை ஹொலிவூட் திரைப்படங்களிலேயே வராத 4 கே. என்ற சிறப்பு பின்னணி ஒலியுடன், யூல்ரா எச்.டியில் வருகிறது. இந்த ஒலி இதுவரை ரசிகர்கள் அறியாத புதிய அனுபவமாகும். ஒலி அதிர்வலைகள் கால்களில் இருந்து தலையை மேவி பறந்து போகக்கூடியதாகவும், கிராபிக்சின் ஜாலங்களை ஒலி மேலும் கூர்மைப்படுத்தும் என்றும், இது இந்தியாவின் கண்டு பிடிப்பு என்றும் கூறுகிறார்கள். இது உலகில் 99 வீதமான திரையரங்குகளில் இல்லை.

அந்தவகையில் இந்தித் திரையுலகிற்கும் ஹொலிவூட் திரையுலகிற்கும் தயாரிப்பு ரீதியாகவும் தொழில் நுட்ப ரீதியாகவும் ஒரு சவாலாகவே இருக்கிறது. வென்றால் ஹொலிவூட்டை குலுக்கிய பெருமை தமிழுக்குக் கிடைக்கும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமி.ஜாக்சன், அஸய்குமார் நடிப்பில், ஆஸ்கார் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், ஷங்கர் இயக்கத்தில் வெளி வருகிறது.

இந்தத் திரைப்படம் இதுவரை சாதனை படைத்துள்ள பாகுபலி 2 ன் வசூலை முறியடிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. முதல் நாள் 100 கோடி வசூலாகும் என்றால் நான்கு தினங்களில் தயாரிப்பு செலவை எட்டித் தொட்டுவிடும் எனபது கணக்காகும்.

தமிழர் புலம் பெயர்ந்தது தாய் நாடாம் இலங்கைக்கு நன்மை செய்ததை விட கோடம்பாக்கம் சினிமாவுக்கே அதிக நன்மை செய்திருக்கிறார்கள் என்ற வரலாற்றையும் இப்படம் எழுதியுள்ளது.

ஒரு விடயத்தை நன்கு திட்டமிட்டு பிரமாண்டமாக செய்தால் அதன் அறுவடை அதைவிட பல மடங்கு பெரிதாக இருக்கும் என்று சந்திரலேகா திரைப்படத்தில் எஸ்.எஸ்.வாசன் கூறிய தத்துவம் இன்றுவரை ஆனந்தவிகடனை வாழவைப்பது போல, லைக்கா நிறுவனத்தின் இந்த முயற்சியும் உள்ளது. அவர்கள் மீது சர்வதேச அரங்கில் பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி இந்த செயலும் இதன் புகழும் நிற்கும் என்பதை திரைப்படம் சொல்லும் என்கிறார்கள். உண்மைதானா இன்றிரவு உண்மை தெரிந்துவிடும்.

அலைகள் சிறப்பு எழுத்து 28.11.2018

Related posts