கஜா புயல் தமிழர் நடுவம் கிராமங்கள் தோறும் சென்று உதவி

கஜா புயல் தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கும் அழிவுகள் கிராமங்களையே பாரிய அளவில் பாதித்திருக்கிறது. உதாரணமாக டெல்டா பகுதியில் ஏற்பட்டிருக்கும் சேதங்கள் சொல்லும் தரமன்று.

ஏழை விவசாயிகளின் கூரைகளை அடியோடு அடித்துச் சென்றுவிட்டது. வீடுகளை விட்டு வெளியே வந்தால் கொசுக்கடி தாளமுடியாத தொல்லையாக இருக்கிறது. மின் விளக்குகள் இல்லாமையால் சிறிய டார்ச்களை வழங்க வேண்டியிருக்கிறது.

ஆடுகள், மாடுகள் என்று சிறு தொழில் செய்தவர்கள் தமது கால்நடைகளை இழந்து தவித்து நிற்கிறார்கள்.

தென்னை, பனை போன்ற மரங்கள் அவர்களுக்கு பயன் கொடுத்தன எல்லாமே இப்போது பாட்டமாக சரிந்து கிடக்கிறது.

என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியாத தவிப்பு ஏழைகள் உள்ளங்களில். அவசரமாக பல உதவிகள் தேவைப்படுகின்றன.

கூரையின் மேல் போடப்படும் தறுப்பாள் இதன் விலை 960 ரூபா, எல்.சி.டி விளக்கு 250 ரூபா, கொசுவத்தி 36 கொண்ட பாக்கட் சுமார் 200 ரூபா அளவில் வருகிறது. இவை மிகவும் எளிமையான உதவிகளாகும்.

முதலில் மீண்டெழ வேண்டும் அதற்கான அவசர உதவிகளின் தேவை அரசும், சர்வதேச தொண்டு நிறுவனங்களும் வந்து சேருமளவுக்கு காத்திருக்கக் கூடியதல்ல. பல அரசியல்வாதிகள் மக்களால் அடித்து விரட்டப்படுகிறார்கள். ஒருவர் சுவர் ஏறி தப்பிப் பிழைத்து ஓடியுள்ளார்.

இன்னொரு அரசியல் தலைவர் போனால் அடி விழுமென பயந்து புயலே அடிக்காத கேரளா பகுதிக்கு சென்று உதவிகளை வழங்கி புகைப்படம் எடுக்க வேண்டிய நிலைக்குள்ளாகுமளவுக்கு போயுள்ளது விவகாரம்.

மக்கள் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து அவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கோபம் பொங்கி பெருகியிருக்கிறது. இதை தமிழக ஊடகங்கள் பல அடியோடு மூடி மறைத்துள்ளன. சமூக வலைத்தளங்களே உள்ள கள நிலவரத்தை காட்டுகின்றன.

எல்லாவற்றையும் விட முக்கியமான செய்தி ஒன்றை தமிழர் நடுவம் பதிவு செய்கிறது. பல அடிமட்ட கிராமங்கள் தமிழகத்தின் நகரப்பகுதிகள் அடைந்துள்ள முன்னேற்றங்களுடன் ஒப்பிட்டால் கால் நூற்றாண்டுக்கு மேல் பின்தங்கிக் கிடக்கின்றன.

எவ்வளவு பெரிய சமுதாய தவறு நடந்திருக்கிறது என்பது புயல் புகுந்த பின்னர்தான் தெரிய வந்திருக்கிறது. மிகப்பெரிய உள்ளக கட்டமைவு அவசியம் என்பதை அழிந்து கிடக்கும் ஒவ்வொரு கிராமங்களும் நிதர்சனமாகக் காட்டுகின்றன.

இந்த இக்கட்டான நிலையில் உதவிகளை வெளிநாட்டில் இருந்து ஒரு பெரிய நிறுவனம் செய்கிறது என்றால் அது ஊடகங்களில் விளம்பரமாக மட்டுமே இருக்கும். உரியவருக்கு உதவி போய் சேரும் என்பதற்கான உத்தரவாதம் கிடையாது.

உதாரணமாக 2004 சுனாமிக்கு சேர்த்த நிதியே இன்னமும் உரியவர்களை சென்றடையாமல் இருப்பது உலகம் அறியாத இரகசியமல்ல.

ஆகவேதான் இப்போது ஊழல் இல்லாத உதவியே அவசியமாகிறது. 100 வீதம் மக்கள் உதவி செய்தால் 40 வீதம் பாதிக்கப்பட்டவர்களை போய் சேரும் என்று கூறுவதற்கு முடியுமா என்பது ஒரு கேள்வி. இன்று புகழ் பெற்ற சர்வதேச நிறுவனங்களாலும் இன்றைக்கு இது முடியாதிருக்கிறது.

சர்வதேச நிறுவனங்களுடைய அதி உயர் சம்பளம், வாகனங்கள், நிர்வாகம் என்று பார்த்தால் சுண்டங்காய் காற்பணம் சுமை கூலி முக்காற் பணம் என்றளவிலேயே உலக உதவி நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் சென்றடையும்.

ஆனால் இதிலிருந்து வேறுபட்ட வடிவில் உதவ வேண்டுமானால் நேரடியாக களத்திற்கு செல்லும் சரியான தியாக உணர்வு மிக்க களப்பணியாளர்கள் வேண்டும்.

அத்தகைய ஜீவனுள்ள களப்பணியில் இப்போது தமிழர் நடுவத்தின் இளைஞர்கள் களமிறங்கியிருப்பது போற்றுவதற்குரிய ஒரு பணியாகவே இருக்கிறது.

தமிழர் நடுவம் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் போகக் கூடிய இளைய புதிய, ஊழல் இல்லாத வீரியமிக்க அமைப்பாக இருக்கிறது என்கிறார் அதன் தொடர்பாளர் செல்லப்பாண்டியன்.

இவர்களுடைய பணிகள் நேரடியாக மக்களை சென்றடைவதாகவே இருக்கின்றன. பல இடங்களில் மக்களுடைய வாழ்வு 90 களில் இருந்ததைப் போலவே இருப்பது ஆச்சரியம் ஆனால் அதுதான் உண்மை என்கிறார்கள். ஏழை மக்களால் இந்தப் புயலின் வேகத்தை தாங்க முடியவில்லை.

அதிலிருந்து மீண்டெழவும் அவர்களுக்கு வழிகள் தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தமிழர் நடுவம் களத்தில் நின்று பணியாற்றிக் கொண்டிருக்கிறது.

தோழர் செல்வா பாண்டியரின் மறைவுக்கு பின்னதாக ஏற்பட்ட வெற்றிடத்தை கடந்து வேகமாக பணியாற்றத் தொடங்கியுள்ளனர்.

அலைகள் 20.11.2018

Related posts